செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்


ஒவ்வொரு முறையும் ஊர் செல்லும் சமயங்களில் சக்தியை புதுப்பித்துக் கொள்வதுபோல் பிள்ளையார்பட்டியும் குன்றக்குடியும் போவது வழக்கம்.. இந்தமுறை நெருங்கிய உறவின் திருமணம் என்பதால் சம்பந்தப்பட்ட சம்பந்தப்புரமும் செல்லவேண்டி சிறுகூடல் பட்டி விஜயம்.. சென்றபின்தான் தெரிந்தது .. பக்கத்திலேயே கவியரசர் இல்லம் இருப்பது... பார்வை நேரம் அல்ல என்பதால் உள் சென்று பார்க்க இயலவில்லை.. ஆனால் ஒரு கவிதை கருக்கொண்ட கனவு போல அந்த இல்லம் என்னை மயக்கியது... எப்பேர்ப்பட்ட வீச்சு அவருடையது .. ஆசுகவி..அறம் பாடினால் பலிக்கும். மகாகலைஞனின் இல்லம் தொட்ட காற்று என் உள்ளம் புகுந்து உருவேற்றியது.. இன்னும் இன்னும் சிறக்க எழுது ..முன்னேறு என்று.
சிறுகூடல் பட்டியில் இன்னுமொரு சிறப்பு அங்கு இருந்த லண்டன் செட்டியார் வீட்டினுள் இருந்த கர்னகை வாழ்வியல் ஓவியங்கள்..
கடல் கொண்டதால் காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) இருந்து தெற்கே குடிபெயர்ந்த நகரத்தார் நீர் புகுந்து அழிக்க எட்டா உயரத்தில் .,சுமார் 6 அடி (பத்து பன்னிரெண்டு படிகள்) உயரத்தில் முழு வீட்டுக்கும் தளம் உயர்த்திக் கட்டிய எழில் மிகு வீடுகளை காணலாம்.. பர்மா மரத்தூண்கள்., தேக்கு மரச் சிற்பங்கள்., மரத்தளங்கள் .. கொண்ட இரண்டு கட்டு ., மூன்று கட்டு வீடுகள்..
இந்த வீடு இரட்டை வளவு கொண்ட.. இரட்டை முகப்பு ., பட்டாசாலை., ஆல்வீடு., பத்தி., வளவு., கீழ்வாசல் ., ரெண்டாம் கட்டு., போஜன் ஹால்., சமையற்கூடங்கள் மாடிகள்., மாடியறைகள்., சாமான் போடும் வீடுகள்., உக்கிராண அறைகள்., பூஜையறையகள் என பிரம்மாண்டமானது..

வீட்டுக்குள்ளேயே டூர் போய் வந்து ஜூஸ் ., சாக்லேட்டுகள்., பழங்கள் எல்லாம் உண்டு சிரம பரிகாரம் செய்து கொண்டு இந்த படங்கள் எல்லாம் எடுத்து வந்தேன் மக்காஸ் .. உங்களிடம் பகிர்ந்து கொள்ள..
 
கோவலன் .., கோவிலன் எனவும் ., கண்ணகி கர்னகை எனவும் இந்த ஓவியங்களில் குறிப்பிடப் படுகிறார்... இன்னும் நிறைய ஓவியங்கள் இருந்தன.. நமக்கு சரித்திரம் தெரியாததால் எடுக்கவில்லை..







இதில் கோவிலன் கர்னகை திருமணம் முதல் கர்னகை பாண்டியனிடம் நீதி கேட்பது வரை இருக்கிறது.. பாண்டியமன்னனின் முகத்தில் இருக்கும் அலட்சியத்தன்மையும் ., கர்னகையின் சீற்றமும் என்னை வியக்க வைத்தது..

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

எய்தது என்ன....?

அவரவரே நிரம்பிய
அட்சய பாத்திரமாயிருக்க..
அடுத்தவரிடம்
பிட்சைப் பாத்திரம் ஏந்தி..

குத்திய முள் எல்லாம்
பிடுங்கிப் போட்ட பின்னும்
தொடர்ந்து வந்து
கொண்டு வலி மட்டும்...

பரமபதப் பாம்புகளால்
ஏறுதலும் இறங்குதலுமான
வாழ்வில் எது குறிக்கோள்..?
எய்தது என்ன..?

ஏதோ ஒரு உடல் மினுங்க
பட்டுப்புழுவாய் இலை விழுங்கி
கூடு செய்து
கூண்டோடு கொடுத்து...

செக்கைச் சுற்றும் மாடாய்
அச்சைச் சுற்றும் பூமியாய்
வீட்டைச் சுற்றும் மனைவியாய்..

வேலையோடு போராடும்
என் பின்னால் உன் பார்வை
துளைத்து துளைத்து
ராஜ பிளவை..

போகப் பொருளுக்கென்ன..
அன்பும் பாசமும் காதலும்..
போகமும் பொருளுமே போதும்..

டிஸ்கி :- இது சென்ற வார 21 . 8 . 2010 இளமை விகடனில் வெளி வந்துள்ளது ..

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

நட்பும் ..துணையும்..

அறிமுகம் ஆனவுடனே
முகம் பார்க்கக் குழைந்து
குரல் கேட்க விழைந்து
விருந்துண்ண அழைத்து
விடியுமட்டும் கதைத்து
முடியுமட்டும் முயன்று
முடிந்தவரை அடைந்து
நீர்த்துப் போகிறது அல்லது
மந்திரிக்க வேண்டிய
விஷக்கடியாகிறது
நூல் நெய்த நட்பு...
****************

முகப்புத்தக நண்பர்கள்
தின அழைப்பில்
கூடிக் களிக்க முடியாமல்
உம்மணாமூஞ்சியாய்...

ஆங்கிலத் திரைப்படமும்.,
அறுசுவை உணவும்.,
ஷாப்பிங் மாலும்.,
குளிர்பதனக் காரும்.,

கேட்ட கேட்காத பொருட்களும்.,
மல்லிகைப்பூ வாசமுமாய்..
உறங்கும் போதுதான் உறைத்தது..

பூங்கொத்தும் புன்சிரிப்புமாய்..
கணவரே நண்பராய்., கைகோர்த்துக்
களிகொண்டு அலைந்தது..
**************************

நினைவுகள் நீந்திக்
கொண்டிருக்கும் மனதில்
வலை கொண்டு ஒவ்வொரு
மீனாய்ப் பிடித்துக்
கவனமாய் வெளியேற்றினேன்..
தப்பி ஒளிந்த ஒற்றை மீனாய்
என்னுள்ளே நீ மட்டும்..
************************

மழை....
என் கைத்தலம் பற்றியது குடை..
பாதுகாப்பாய் என்னைச் சூழ்ந்து..
காற்று பறித்தெறிந்தாலும்..
நெளிந்து வளைந்து
விட்டுக் கொடுத்துப் போராடி
நம்பிய என்னை பத்திரமாய்
இலக்கில் சேர்த்து..

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

தமிழாய் தமிழுக்காய்..


கூழுக்காய்., பாலுக்காய்.,
வேலைக்காய்., வெட்டிக்காய்.,
அலையாய் அலைந்ததில்லை.,
தமிழாய் தமிழுக்காய்..
ஆங்கிலமா ..அரபியா
அனைத்துக் கலப்பிலும்
அணையாமல் காத்துவிடு
தமிழாய் தமிழுக்காய்..
ஊற்றுமொழி தேற்றுமொழி
ஊனுயிரோடு யாத்தமொழி
எழுத்தாணி கோத்தமொழி
தமிழாய் தமிழுக்காய்..
ஆதிகுடிகளின் அரிச்சுவடி.,
ஒலைச்சுவடிகளில் பொறித்தபடி
நீதிநெறிகளில் நின்றபடி
தமிழாய் தமிழுக்காய்..
வாலைக்குமரியாய் வளப்பமடி
வாழும்தாயாய் நெருக்கமடி
வந்தாரையெல்லாம் வாழவைத்தபடி
தமிழாய் தமிழுக்காய்..
எது(கை)கொண்டு சேர்த்தாலும்
எத்திக்கும் இணைந்தபடி
என்னே கனிவு.. கம்பீரம்,, காந்தம்..
தமிழாய் தமிழுக்காய்..
என் செய்தாயெனக் கேட்காமல்
என்றுமான பாசத்தால்
எங்கேயும் எப்போதும் எல்லாமும்
தமிழாய் தமிழுக்காய்..
உலகைக் கண்விரியப் பார்த்து.,
கை கோர்த்தலைந்து.,
மெய்விதிர்த்ததிர்ந்து.,
வலைப்பூவில் வாழுகிறோமே
தமிழாய் தமிழுக்காய்..
டிஸ்கி:- இது நண்பர் மணிவண்ணனை ஆசிரியராகக் கொண்டு கொங்கிலிருந்து வெளியாகும் புதிய “ழ” வில் இந்த மாதம் வெளியாகியுள்ளது..

சனி, 21 ஆகஸ்ட், 2010

மாயாவி..

நீ கொடுத்த கோப்பை அப்படி
நீ இல்லாத போதும்
எனக்கானதை சுரந்து கொண்டே..

எல்லா மனத்திலும்
வாணவேடிக்கை உன் வருகையால்
என் பெர்சியாய்டே..வா..

நிலவாய் மேகத்துள் மறைந்து..
அதுதானே உன் கவர்ச்சி..
எண்ணத்தீயே..

குழந்தையாய் மாற்றிவிடும்
அற்புத செங்கோலோடு
உன் ஆதிக்கம்..ஆவரணம்..

உண்ணலில்லை உறங்கலில்லை
உன் எண்ணம் மகிர்ந்து..
அணையைக் கட்டு ..என்னைத் தடுத்து..

வளையங்களோ சீட்டுக்கட்டோ
இல்லாமல்.. வண்ணம் சொரிய..
வானவில்லை வளைத்து
எனைச் சூடிய மாயாவி..

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பெயர்ச் சங்கீதம்..

தினமொருமுறை என் பெயரை
உரைத்துச் செல்கிறாய்..
உள் உவப்ப...

இசைக் கெடிகாரமாயும்.,
சீன வாஸ்துவின்
காற்றிசைச் சிணுங்கியுமாய்
ஒலித்துக் கிடக்கிறது அது..

எடுத்து ஒளிக்கும் ப்ரயத்தனத்தில்
உன் வார்த்தைகளைத்
திரும்பத் தவறவிட்டு.,

திகைத்துப் பிடிக்கையில்
பேரோசையாய் வெடித்துச்
சிதறுகிறது அது..

காற்று பற்றி இழுத்துக்கொண்டு
பரிதவித்துத் திரிகிறது..
உன்னிடமும் என்னிடமும்
முகமாத்துச் செய்ததுபோல்..

பாலருந்தும் குழந்தையின் சேட்டையாய்..
பால் சிதறி வடியும் துளிகளும்
அதன் வாயுமாய்
மணத்துக் கிடக்கிறது எல்லாமும்..

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

முத்தக் குருவிகளும் .. முருங்கைப் பூக்களும்..

உன் முத்தங்கள் ஒரு குருவியைப் போன்று கீச்சென்ற சத்தத்துடன் என் இதழ்க்கூட்டில் வந்தமர்கின்றன.. இப்படி எத்தனை குருவிகள் ஒளிந்திருக்கின்றன என திறந்து பார்த்தேன்.. அனைத்தும் வெட்கத்தில் செவ்வண்ணமாய் என் இதழ்களை நிரப்பி..

சிகரெட் புகைப்பவனின் வளையங்களாய் உன் முத்தங்களை என்னை நோக்கி பறக்க விடுகிறாய்.. என் இதழ்களில் அவை மாலையாய் விழுகின்றன.. சமயத்தில் மௌனமாய் இருக்கும் என் இதழ்களில் மலர் வளையமாயும்..

மலை வீட்டின் கணப்பாய் உனது முத்தம்.. குளிர் கட்டைகளை எரித்து அருகேயே அமர்ந்திருக்கிறேன் .. அதிக கதகதப்புக்காய்..

புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க..

முருங்கைப் பூவிலும் தேனெடுத்துக் கொண்டிருந்தன சில கருவண்டுகள் ..
தேனற்ற பூக்கள் உண்டா,,?

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

கண்கட்டு

நட்டுத் தண்ணீர் ஊற்றி
நாம் வளர்த்த சிறுவிதை
கட்டுக்குள் இருப்பதாய்
சட்டாம்பிள்ளைத்தனம்..

எங்குசென்று நீருரியும்.,
யாரிடம் பூத்தூவும்.,
எவருக்குக் கனி கொடுக்கும் என
அறிந்திராமல் உடன்..

பக்கத்து வீட்டுக்காரனோ
கரண்டுக்காரனோ வெட்டி
எறியும்போதுதான் தெரிகிறது.,

வேரோடிப் போயிருப்பதும்.,
புரையோடிப் போயிருப்பதும்.,
கிளை மீறிப் போயிருப்பதும்...

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

ஒரு வெறுத்தலின் முடிவில்..

பட்டியலிட்டுப் பார்க்கிறேன்
உன் அலட்சியத்தை.,
அகங்காரத்தை ., ஆணவத்தை.,
எள்ளலை ., கோபத்தை..
தேவையோ .,தேவையற்றோ.,
பூதக் கண்ணாடி கொண்டு விரித்து..
வெறுப்பதற்கான எல்லைகளை
வரையறுத்துக் கொள்கிறேன்..
நீ கீறியது ஒரு முறை..
நான் கிளறிக் கொண்டது பலமுறை..
யட்சிணியாய் நான் இருக்க
இராட்சசனாய் நீயும்
விழுங்கிய பின்னும்
மீதம் இருக்கிறோம்
விழுங்கப் படுவதற்காய்..
நீ விட்டுச் சென்ற சரங்கள்
பாதியிலேயே தொங்கிக் கொண்டிருக்க
நான் சூட்டும் மாலைகளையும்
நீ ஏற்காமல் ..
எங்கிருந்தோ வந்து
இரை தேடிக் கூடடையும்
பருவகாலப் பறவையாய்...
பறந்து சென்ற பின்னும்
மிச்சமிருக்கிறது உன் புன்னகையும்
சில பகிர்வுகளும்..
எல்லா சாத்தியக் கூறுகளையும்
கூறாக்கி விடாமல்..

புதன், 11 ஆகஸ்ட், 2010

திரிசக்தியின் திரைச்சீலை.. எனது பார்வையில்..



திரைச்சீலை காட்டும் பரிமாணங்களை சாதாரண ரசிகனாய் தனது பார்வையில் அசாதாரண நுணுக்கத்தோடு விவரிப்பதே ஜீவாவின் பாணி..
மிகச் சரளமான நடையில் ரசனை இதழில் நண்பர் மரபின் மைந்தன் முத்தையா ஊக்குவிக்க எழுதப்பட்ட இந்நூல் திரிசக்தி பதிப்பகத்தின் வெளியீடு.. விலை ரூ 90/-

திரைச்சீலை விலகியபின் தெய்வதரிசனம் தரும் இன்பத்தை ரசிகன் பெறுவதே இதன் வலிமை...அடிப்படையில் ஓவியரான ஜீவா உலகப் படங்கள் இந்தியப் படங்கள் ., ப்ராந்தியப் படங்கள் என பல்வேறுபட்ட ரசனைகளையும் குழைத்து வரைந்து இருக்கிறார் இதில்..ஒவ்வொன்றுக்கும் ஒரு சாம்பிள் போல..

A STORY CAN BE MANY THINGS. TO A PRODUCER IT'S A PROPERTY THAT HAS A BOX-OFFICE VALUE. TO A WRITER ITS A SCREEN PLAY. TO A FILM STAR IT'S A VEHICLE. TO A DIRECTOR IT'S AN ARTISTIC MEDIUM.TO A GENRE CRITIC IT'S A CLASSIFIABLE NARRATIVE FORM. TO A SOCIALOGIST IT'S AN INDEX OF PUBLIC SENTIMENT. TO A MOVIEGOER IT CAN BE ALL THESE, AND MORE. ..by LOUIS GIANNETTI.

மாறுபாடான திரைப்படங்கள் இயக்கும் முயற்சியில் ஈடுபட்ட ., ஈடுபடும் சிலர் மற்றும் அவர்களின் அற்புதப் படைப்பினைப் பற்றிய தொகுப்பு இந்நூல்.
37 அத்யாயங்களும் திரையுலக பிரபலங்களின் வார்த்தைகளுடன் தொடங்குகிறது .

”ஸ்பாகட்டி வெஸ்டர்ன்” படங்களைப் பற்றிக் குறிப்பிடும் இதில் பூகோளக் குளறுபடிகளுடன் இருப்பதின் நையாண்டியுடன் ஆரம்பிக்கிறது .படங்களின் பெயர்களைத் தமிழ்ப்படுத்தும் அடுத்த அபத்தத்தையும்., (தி குட் தி பாட் அண்ட் தி அக்ளி.. மண்டையோட்டில் டாலர் தேடும் மகாமுனியாய்..!!!) விட்டுவைக்கவில்லை.

திரைப்படங்களின் உருவாக்கம் ., வளர்ச்சி., வீழ்ச்சி., நிலைத்து நிற்கப் போராடுதல் இவற்றின் பகிர்வு .. நெடிய உழைப்பு ஜீவாவினுடையது.. தந்தையுடன் செல்ல ஆரம்பித்து இன்றுவரை பார்த்த திரைப்படங்களென்று தொகுத்து விவரிப்பது அழகு ... இது போன்ற ரசிகர்களால்தான் சின்னத்திரை இருந்தாலும் வெள்ளித்திரை ஜெயிக்கிறது..

தெருக்கூத்திலிருந்து எடுக்கப் பட்ட படங்கள் (வீரபாண்டிய கட்ட பொம்மன்)., புராணப் படங்கள்., மௌனப் படங்கள்., பேசும் படங்கள்.,சரித்திரப் படங்கள் ., புரட்சிப் படங்கள், குழுக்களாக படத்தை உருவாக்குதல்.,மற்றும்

பிண்ணனிக் களன்களோடு சம்பந்தப்பட்ட படங்கள் (பாலம்.- ப்ரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய், மருத்துவமனை- நெஞ்சில் ஓர் ஆலயம்., பயணம்- மோட்டர் சைகிள் டைரீஸ்.,) வெவ்வேறு கதாபாத்திரங்களின் மூலம் கதை சொல்லும் உத்தி(விருமாண்டி)., மற்றும்

மெதட் ஆக்டிங் (சிவாஜி)., பாரலல் சினிமா(அபர்ணா சென்., ஷ்யாம் பெனகல்).,சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி., மர்மத்திரைப்படங்கள்( ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்)., பாடல்கள் அற்ற சினிமா (அந்த நாள்).,மற்றும்

சிறிய பட்ஜெட் படங்கள்., குறும்படங்கள்(மாதவராஜின் இது வேறு இதிகாசம்) ., ஆவணப் படங்கள் ( ராமையாவின் குடிசை) ., யதார்த்தப் படங்கள் ( சீனிவாசனின் சிதம்பரம்., காதல்., வெய்யில்., தவமாய் தவமிருந்து.,ஆட்டோகிராஃப்).கனவுப்படங்கள் (ட்ரீம்ஸ்).,இரண்டாம் உலகப் போர் தொடர்பான படங்கள்(LA VITAE'S BELLE..LIF IS BEAUTIFUL) மற்றும்

மழைப் பாடல்கள்., கவிஞர்களின் பங்கு .,பெண் இயக்குனர்களின் பங்களிப்பு ., நடிகர்கள் டைரக்டராவதும் ., டைரக்டர்கள் ஹீரோவாய்., வில்லனாய் காமெடியனாய் நடிப்பதும்., மற்றும்

நான் லீனியர் கதை சொல்லும் உத்தியுடன் கூடிய படங்கள்(குவெண்டின் ட்ராண்டினோவின் பல்ப் ஃபிக்‌ஷன்)., நியோ ரியலிசப் படங்கள் ( பை சைக்கிள் தீவ்ஸ்).,ஈரானியப் படங்கள்(சில்ரன் ஆஃப் ஹெவன்) ., இலங்கையில் எடுக்கப்பட்ட படம்( மண்) .,சினிமா பாரடீசோ., சிடிசன் கேன்., மற்றும்

தாதாக்கள் படம் ( நாயகன்)., விளையாட்டு அல்லது பந்தயத்தை மையமாக வைத்து படங்கள் ( லகான்., எஸ்கேப் டு விக்டரி., ஜோ ஜீதா ஹை வோஹி சிக்கந்தர்) ., சண்டைப் படங்கள்.(எண்டர் தி ட்ராகன்), நகைச்சுவைப்படங்கள் (சார்லி சாப்ளினின் ஸ்லாப்ஸ்டிக் வகை காமெடி)., மற்றும்

ஹோலோகாஸ்ட்---இனப் படுகொலைப்படங்கள் (ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்)., சிறைச்சாலைப் படங்கள் ( மகாநதி., மதிலுகள்., ஷஷாங்க் ரிடெம்ஷன்) ., விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை.,( ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன்) ( ஜெயமோஹனின் ஏழாம் உலகம் நாவலில் வரும் பிச்சைக்காரர்களின் வாழ்வு சித்தரிக்கும் நான் கடவுள் ). , மற்றும்

சிவாஜி., ஸ்ரீதர்., மஜித்மஜீதி., ஆர்சன் வெல்ஸ்., அந்தோணி க்வின்., ஜி எம் கு்மார்., சேரன்., கின்லி .. என வியக்க வைக்கும் பகிர்வுகள் ஏராளம்..

இவற்றில் பலவற்றை சொற்ப படங்களே பார்த்திருக்கும் நானும் பார்த்திருக்கிறேன் என்பதே மிக வியப்பான ஒன்று .. அந்த அளவு தேர்ந்த ரசனையுடன் பரிமாறப்பட்டுள்ளது இந்தப் புத்தகம்.. 75 ஆண்டுகளுக்கும் மேலான சரித்திரம் உடைய சினி்மா உலகத்தை.. அகத்தியரின் கமண்டலம் போல் அடக்கி வைத்து இருப்பது ஜீவாவின் சாமர்த்தியம்..

ஒவ்வொரு சினிமா ரசிகனும் படித்து மகிழ வேண்டிய ஆவணம் இந்நூல்.
ஒவ்வொருவருக்கும் தனதான சினிமா சம்பந்தப் பட்ட எண்ணங்களை எழுப்புவது இந்நூலின் வெற்றி..

REMEMBER RED , HOPE IS A GOOD THING, MAY BE THE BEST OF THINGS. AND NO GOOD THING EVER DIES .-- BY ANDY DUFRESNE..

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தம்பி மக்கள்

கரும்புச்சாறோ., கன்னல் பாகோ
இரும்பு கூட உருகும் சிரிப்பு..
தேவதைகள் கூப்பிடும்
தேனத்தை அமிர்தமாய்..

வாசம் பொதிந்த
வளையல் துண்டுகளும்.,
கழுத்து மணிமாலைகளும்
வந்து சென்ற பின்னும்
வீடு கூட்ட ஏலாமல்...

சீட்டுக் கட்டில் சிதறிய ஜோக்கரும்
வாய் வைத்துக் குடித்த
குளிர்பானக் கோப்பைகளும்..
சுவற்றோரம் அப்பிக் கிடக்கும்
கோகோ கோனின்
குளிர் பனிக்குழைவுகளும்..

குழைந்தெடுத்து தோய்த்ததுபோல்
குழைய வைக்கும் கொஞ்சல்களும்
சிறு குறும்பும்.,செருப்பு மாறிப் போட்டுக்
கொண்ட செல்லக் கோபங்களும்..

மடியில் அமர்ந்து ரீங்கரித்த
ரிங்கா ரிங்கா ரோஸஸ்களும்
சோறைக் கண்டால் ஓட்டமாய் ஓடுவதும்
நூடுல்ஸ் பூரியை விரும்பி உண்பதும்...

நினைவலையின் அடுக்குகளில்
பின்னி அடங்காத பின்னல் சடையழகிகள்..
பெரிய கண்ணழகிகள் .. என்னை கண்
விழித்தே விழுங்கியவர்கள்..

விடுமுறைக்கு விடுமுறை
வளர்ந்து வியப்பாகியவர்கள்..
பச்சை மயில்கள்..
பாசக்காரக் கிளிகள்..

என் பிரபஞ்சத்துள் உட்புகுந்த
இரட்டை சூரியன்கள்..
பெண் இல்லாக் கலி தீர்த்த
பேரரசித் திருமகள்கள்..

உச்சி மோரும் போதெல்லாம்
உவப்பான அலை தவழும் உள்ளுள்..
வாழ்க வளர்க..எத்தனை பேறு உண்டோ
அத்தனையும் பெற்று..என் அருமை மக்கா.

டிஸ்கி:- என் வலையுலக சகோதரன் கோபிநாத் மு்த்துசாமிக்கு போனவாரம் பெண்குழந்தை பிறந்து இருக்கிறது.. ரோஷிணியும்., ராகவியும் புதுக் குட்டிப் பெண் ஜனனியும் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்..

சனி, 7 ஆகஸ்ட், 2010

பாலை...

ப்ரியங்கள் தொலைந்த காடொன்றில்
கிளைத்துக் கிடந்தது மொட்டைமரம்.,
வசந்தத்தின் எச்சமாய்...

வேம்பும் குயிலுமாய்
வேதனையில் கழிந்த இடம்
கழுகுகளும் வல்லூறுகளும் அமர...

சருகுகளும் சுள்ளிகளும்
காகங்களின் கூடாகவோ
குருவிகளின் வீடாகவோ....

உறைந்தது காலம்..
கூகைகளும்., கோட்டான்களும்
ஆந்தைகளும் கீறிப் பிளந்தது தவிர..

வௌவால் அண்டிய மண்டபங்களாய்
நாறிக் கிடந்தது எல்லாம்
சுத்தம் செய்தும் போகாமல்..

கரும்புச்சக்கை குத்தும் காடு
மிதித்துக் காய்ப்பேறி ..
வெடித்துக் கிடக்கும் காலடித்தடம்..

தீமிதி போலும் எறிகற்கள் போலும்
சேமித்த கோபமெல்லாம்
பாசமழுங்கிய கூழாங்கல்லாய்..

நிலவும் சூரியனும்
மணற்புயலும் சுழல
புல்லற்றுக் கிடந்தது பாலை..

வேரோடும் தூரோடும்
பேர்க்க ஏலாமல்
கிணற்றுள் முளைவிட்டு ஆல்..

ரத்தம் தலைகேறி சித்தம் கலங்கி
நின்றதெல்லாம் மாறியது ஒரு பொழுதில்
சீவனற்ற சிவனாய்...

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

அவள் ஒரு தொடர் (பாதிப்பு) பதிவு...

விதூஷும் தமிழ்மகனும் ஒரு தொடர் பதிவெழுத அழைத்து இருந்தார்கள்.. விதி யாரை விட்டது .. அட மக்காஸ் உங்களைத்தான் பார்த்து பரிதாபப் படுறேன்.. ம்ம் என்சாய்ய்ய் ...!!!

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் என்ன..?
Thenammai Lakshmanan என்று இருந்தது.. உங்கள் கேள்வி பார்த்து தமிழுக்கு மாறிட்டேன்.. இப்போ நான் உஜாலாவில் ...மன்னிச்சுக்குங்க உவர்மண்ணில் போட்ட சுத்த தமிழச்சி தேனம்மை லெக்ஷ்மணன்..

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா ? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்கக் காரணம் என்ன..?
அப்பா அம்மாவைதான் கேக்கணும் தவிட்டுக்கு வாங்கும் போது வேறு பேர் இருந்துச்சான்னு.. ( எங்க வீட்டுல அப்போ வேலை செய்த சிகப்பி அக்கா அப்பிடி சொல்லியிருக்கு .. உன்னை தவிட்டுக்கு வாங்கி இருக்குன்னு) ..
தேனம்மை என்பது என் அப்பத்தா பேரு.. அப்பிடி இனிப்பா இருப்பேன்னு வைச்சு ஏமாந்து இருக்கலாம்.. லெக்ஷ்மணன் என்பது என் கணவர் பேரு .. அவரோட பேரு காரணம் எல்லாம் சொல்லணுமா.. !!

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி..
என்னோட தமிழம்மா சுசீலாம்மாதான் காரணம்.. வேணாம் அவங்களை யாரும் கோபிக்காதீங்க.. நல்லது நெனைச்சு செஞ்சுட்டாங்க....:))

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
தமிழ்மணம்., திரட்டி ( இப்போ காணாமப் போச்சு ) தமிழிஷ் என்ற இண்ட்லியில் சேர்த்தேன் ( நன்றி . விஜய் ) முகப்புத்தகத்திலும்..

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டதுண்டா..? ஆம் என்றால் ஏன்..?அதன் விளைவு என்ன..? இல்லை என்றால் ஏன்..?
முதலில் என்னை தொடர் பதிவு எழுத அழைத்தவர் மணிகண்டன்.. தீபாவளி பற்றியது .. ( இப்ப வருத்தப்படுறாராம்.. நோ நோ ஃபீலிங்ஸ் மணி ) .. அதை பார்த்து டைரக்டர் சேரன் முகப் புத்தகத்தில்... உங்க கல்கண்டு வடை பற்றிய நம்ம பக்கத்து ரெசிபி படிச்சேன்னார்.. அன்னிக்கு பேச ஆரம்பிச்சவர் ரொம்ப நல்ல நண்பராயிட்டார்.. நல்லவேளை வடையை பார்சல் பண்ணாம விட்டேன்..

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவு எழுதுறீங்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா..?
பொழுது போக்குக்கு எழுதுறதுக்கே அங்க இங்க கூவ வேண்டியதாக்கீது.. இதுல துட்டு சம்பாதிக்கணும்னா படிக்க வர்றவங்க ஓஓஒடிப் போய்ருவாங்க.. மச்சி..

7. நீங்கள் எத்தனை வலைப்பதிவுகளுக்குச் சொந்தக்காரர்.. ? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன..?
மூன்று.. ஒன்று சும்மா.. இன்னொன்று chumma .. மூன்றாவது THENU'S RECIPES
ஒரு தமிழ் வலைப் பதிவு., இன்னொன்று ஆங்கிலம்., மூன்றாவது தமிழும் ஆங்கிலமும்..( அதுல ஒண்ணு ., இதுல ஒண்ணு ., ரெண்டுலயும் பிச்சுப் பிச்சு ஒண்ணு ஹிஹிஹி)..

8. மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ? ஆம் என்றால் யார் அந்தப் பதிவர் ..? ஏன்..?
நேசன்.. நேசன்., நேசன்...

9. உங்கள் பதிவைப் பற்றி முதன் முதல் உங்களைத் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் ? அவரைப் பற்றி.. ? அந்த பாராட்டைப் பற்றி..?
திரு . இராகவன் நைஜீரியா.. அவரைப் பற்றி ஒரு இடுகையே போடலாம்.. ஊக்குவித்தலும் ஆலோசனை சொன்னதுமான உன்னதமான நண்பர்..

10. கடைசியாக --- விருப்பமிருந்தால் உங்களைப் பற்றிப் பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றிக் கூறுங்கள்..
நான் தனியா சொல்ல ஏதும் இருக்கா என்ன.. என் பேரிலிருந்து உடை வரை தம்பி தங்கைகளே விலாவாரியா கருத்து சொல்லி இருக்காங்க.. அக்காக்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லன்னு .. நானும் ஒரு பிரபல பதிவர்தான்னு நிரூபிச்ச அவங்களுக்கு எல்லாம் என் நன்றிகள்..

புதன், 4 ஆகஸ்ட், 2010

நன்றி மறப்பது நன்றன்று..



என் அன்பு அம்மா..எம். ஏ. சுசீலாம்மா.. நான் தேனீ என்றால் இவர்கள் தமிழ்த் தேனீ... இன்று நான் எழுதும் தமிழுக்குக் காரணமானவர்கள்.. ஃபாத்திமா கல்லூரியில் எங்கள் வசந்தம்.. என் நன்றி முழுவதும் இவங்களுக்குத்தான்..

இவர்களுடைய வலைத்தளம் ஆகஸ்ட் மாத லேடீஸ் ஸ்பெஷலில் அறிமுகமாகி இருக்கு.. (கல்வி) பெற்ற மகளை சான்றோள் எனக் கேட்ட தாயாய் என் அம்மா நெகிழ்ந்த போது நான் பிறந்த பயனை அடைந்தேன்.. என் அம்மாவின் மொழி பெயர்ப்பில் இடியட்டை(அசடன்) படிக்கும் ஆவலில் நான்.. சீக்கிரம் கிடைக்கும் அந்த சந்தோஷம் ...!!!



இவங்கதான் வலைத்தளங்களில் எழுதும் நம்ம பெரியன்னை ருக்மணி அம்மா.. புன்னகை சிந்தும் இந்த முகமும் அகமும் எழுத்துக்களும் நன்மை சார்ந்தவை.. அறிவுரைகளையும் அழகாய்ச் சொல்வார்கள்.. இவர்களோட திருக்குறள் கதைகள் இந்த மாதமும் படிச்சு மகிழுங்கள்..
இவங்க என் முகப்புத்தகத் தோழி ஜெயா நல்லப்பன்.. கம்பீரமானவங்க.. எழுத்திலும் செயலிலும்..
கிட்டத்தட்ட 5000 நண்பர்கள் உடையவங்க... எப்ப தூங்குறாங்க.. எப்ப விழிக்கிறாங்கன்னே தெரியாது.. அவ்வளவு சுறுசுறுப்பு.. அவங்களோட ரோஜா கவிதை உங்களுக்காக யங் லேடீஸ் பக்கங்களில்..
காசுமழையில் நம்ம சித்ரா நாகப்பன் உங்களுடைய சேமிப்பு .,முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வழங்கிய ஆலோசனைகளைப் படிச்சுப் பயன் பெறுங்க..
அப்புறம் இந்த மாதம் நான் பயணங்களில் இருந்ததால் என்னோட புதுப் படைப்பு அனுப்ப முடியாமல் போயிருச்சு.. .. அட அப்பிடி எல்லாம் உங்களை நிம்மதியா விட்டுருவோமா என்ன.. கவிதையோ., கதையோ., கட்டுரையோ அடுத்த மாசம் புதுசா வந்து மிரட்டுவோமில்ல..தயாராயிருங்க மக்காஸ்..
வாழும் வரை போராடுங்கள்.., நீங்க நினைச்ச இடத்தை அடையும் வரை...!!!
சந்தர்ப்பம் வரும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள் ...சிகரங்களை எட்டுவீர்கள்..
எனவே..அடுத்த மாத லேடீஸ் ஸ்பெஷல் இஷ்யூவை வண்ணப் படுத்த உங்க SMS கவிதைகள்., முதலீட்டுக் கேள்வி பதில்கள் ., படைப்புகளை அனுப்புங்க..
அனுப்ப வேண்டிய முகவரி:-
sms number : - 78459 70162...
டிஸ்கி 1 :- என் பிறந்த நாளில் தன் வலைத்தளத்தில் கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன் என்று என்னை தனி இடுகை போட்டு வாழ்த்திய வெற்றிவேல் சார் அவர்களுக்கு நன்றி..( நன்றி மறப்பது நன்றன்று இது.. இரண்டாவது )
டிஸ்கி 2 :- என்னுடைய நட்பூ கவிதையை வெளியிட்ட இளமை விகடனாருக்கு.. ( இது மூன்றாவது..)
டிஸ்கி 3 :- என் எழுத்துக்களைக் கவனித்து என்னால் இன்னும் சிறப்பாகவும் செய்ய முடியும் என என்னை ஊக்குவிக்கும் கிரிஜாம்மா அவர்களுக்கு..( இது நாலாவது) ..எனவே நன்றி மறப்பது நன்றன்று.. அன்றே சொல்லிவிடல் வேண்டும்..:))

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

நான் சிவகாமி....!!!

நான் சிவகாமி.. ஆம் .. மாமல்லனின் காதலி.. விரிந்த தோள்களும் பரந்த மார்புமாய் மல்லர்களை ஜெயித்த நரசிம்ம வர்ம பல்லவன்தான்.. காத்திருக்கிறேன் அவனுக்காய்.. ஆம்பலும் குவளையும் கொட்டிக் கிடக்கும் வாவியில் அவன் காலடித்தடங்களை வருடியபடி..

எனக்காய் எத்தனை வீரத்தழும்புகள் அவன் மார்பில்..தேடி வந்தானே என்னைத்தேடி..சாளுக்கியரை அழித்து., நாகமான நாகநந்தியை நசுக்கி..

என் தந்தை ஆயனச்சிற்பியுடன்..மகேந்திரரின் அநுக்கிரகத்தில்... எங்கள் கலை சார்ந்த வாழ்வு .. நான் நடனமாட..என் தந்தை என் எல்லா அபிநயங்களையும் சிலைகளாக செதுக்கி.. எத்தனை பாவங்கள்.. எத்தனை சிலைகள்.. சிலைகளோடு சிலைகளான உயிரோட்டமான வாழ்வு..அத்யந்தத் தோழன் நரசிம்மன் வருகை.. என் எல்லா உணர்வுகளையும் ., நயனபாஷைகளையும் முழுக்க அறிந்தவன் அவன்.. உளியின் ஓசையும் சிலம்பின் சிணுங்கல்களுமாய்.. சித்திரமான வாழ்வு..

நலம்விரும்பி போல வந்தான் நாகநந்தி.. என்னை .,என் தந்தையை ஏமாற்ற.. கலை விரும்பியாய்.. கடத்தியே சென்றான்.. நரம்பு வெடித்து இரும்படித்துக் கிடந்த அவன் கரங்கள் இப்போதும் கூட அச்சமூட்டுவதாய் .. அஜந்தாவின் ஓவியங்களில் ., கலவைகளில் பரிச்சயம் அவனுக்கு.. புத்த பிக்குவாய் மட்டுமில்லாமல் பித்துவாயும்.. குகைக்குள்ளே வாழ்ந்து குறுகியவனாய்.,
வர்ணக் கலவைகளுடன் வாழ்ந்துவந்த அவன் எண்ணம் கருப்பாய்....
பூநாகமாய்.. ஓநாயை ஒத்த முகம்..

வாழ்வென்பது ஒரு நெறி சிலருக்கு... நாட்டியப் பெண்கள் மனதின் ராணிகளாகலாம்.. மஹாராணிகளாக முடியாது.. இது புரியும் போது நான் சிறைப்பட்டு இருந்தேன்.. நரசிம்மன் என்னைக் காப்பாற்ற மதுரைப் படை வேண்டி மணமாகி இருந்தான்..

அவன் வருவான் .. படையெடுத்து மீட்டுச் செல்வான் என்று சூளுரைத்தேன்..தினம் வரும் சூரியனைப் போல அவன் வரவை எதிர்பார்த்து..காதலும் ., காந்தலும்., காந்தமுமாய் அவன் வந்தான்.. என்னால் தாங்க முடியாத நெருப்பாய்.. தடுப்பாய்..மணமான நிலையில்..

விடுபட்டுவிட்டேன்.. விடுபடாத மனநிலையோடு.. காலடி எடுத்து வைத்தேன் மீண்டும் நான் விட்டுச் சென்ற பாதையில் ..அன்னையைப் போன்ற ஆயனரும்., உள்மனம் போன்ற நரசிம்மனும் இல்லாத வாழ்வில்.. பாகலும். பாம்பின் விஷமும் கூட கசப்பு இல்லை நமக்கானவர் இல்லாத வாழ்வில்..

சபதம் மட்டுமே என் வாழ்வு.. சாதித்தது என்ன.. ??

அன்பு கொண்ட நரசிம்மனின் மனச்சிம்மாசனத்தில் நான் .. நான் மட்டுமே என்ற அகந்தையோடு..

சிலசமயம் ஆற்றாமையால் வாழ்வு பிடிக்கவில்லை எனக்கு..

உண்மைக் காதலென்பது உடல் சார்ந்ததல்ல... மனம் சார்ந்தது.. அதுவே போதும்..என்ற நிறைவு..

அம்புலியின் பால் கிரணங்களில்.. ஆவலோடு வந்து பாரிஜாதங்களையும் ., பவள மல்லிகளையும்.. ஒதுக்கி என் காலடித் தடம் வருடுகிறானே.. நான் இல்லாத வாழ்வில்.. எங்கள் சிரிப்பலைகள் போல மென்மையாய் விரிந்து கொண்டே இருக்கிறது வாவி.. என் சிலம்பும் ., அவன் சிரிப்புமாய்..இருக்கிறது கண்ணுக்குத் தெரியாத சில்வண்டின் சத்தங்கள்..

டிஸ்கி..:- என்னை கனவே கலையாதே என்று ஒரு தொடர் பதிவு எழுத அழைத்து இருந்தார் நாய்க்குட்டி மனசு.. மன்னராட்சியில்., மன்னராகவோ., ராணியாகவோ., ப்ரஜையாகவோ நினைத்துக் கொண்டு எழுத வேண்டும் என்பது விதி.. இதை யார் வேண்டுமானலும் தொடரலாம்.. நல்லா இருக்கா சொல்லுங்க மக்காஸ்..:))

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

நட்பூ

நானுமற்று நீயுமற்று
வலியிழந்து வலுவுற்று
நாமான காலம்..
என்றும் நிகழ்காலம்..

கைகோர்த்து விளையாடி
கைதூக்கி நிலைநிறுத்தி..
கிளியாந்தட்டாய்..
ஒருவரிடத்து ஒருவரை இழுத்து..

பள்ளி சென்றோமோ
பாடம் படித்தோமோ
நன்கு துயின்றோமோ
நாளெல்லாம் நட்பால் பூத்தோம்..

காதல்., காமம் அற்று
பால் வேற்றுமையற்று
உன் நோவை நான் வாங்கி
என் உயிரை நீ சுமந்து..

கவலையில் வீழும் போதெல்லாம்
நான் நடப்பதில்லை..
என்னைச் சுமந்து
நீதான் கடந்து செல்கிறாய்..

நெல்லிக்கனியோ., அவலோ.,
நம் நட்பூ உரைக்கப்
போதுமானதாயில்லை..
வடக்கிருந்து உயிர்
துறக்கவும் சித்தமாய்...

வாழ்வான வாழ்வு இது..
வளப்படுத்த வந்த வசந்தமே..
வாழுவோம் நமக்காய்..
நமக்கான அனைவருக்காய்..

ஏழு ஜென்மம் அல்ல..
எழுபது ஜென்மம் எடுத்தாலும்
எதிர்சேவை செய்யவந்த
என்னுயிரே... என் நட்பூவே ..நீ வாழி..

டிஸ்கி: 1 - இந்த நட்பூவும் போனவருடம்
டிசம்பர் மாதம் எழுதிய இந்த நட்பு கவிதையும்
உங்களுக்கெல்லாம் அர்ப்பணம் என் தோழமைகளே.
டிஸ்கி 2 : - இது இந்த வாரம் இளமை விகடன்ல நண்பர் தினக் கவிதையா வந்து இருக்கு மக்காஸ்..