வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மகப்பேறு நிலையங்களா, மரணக் கிடங்குகளா..

நாலு நாளா டிவியை பார்க்க முடியல, ரேடியோ கேக்க முடியல, பேப்பர் படிக்க முடியல. முகநூலுக்கு சென்றாலும் இதே டிபேட்தான். என்னுடைய தோழி கவிதா சொர்ணவல்லி 106.4 ஹலோ எஃப். எம்மில் பணி புரிகிறார். அவரோட வார்த்தைகள்ல இந்த வலிகளைப் பதிவு செய்றேன்..

///ரெண்டு வருஷமா நானும் பாலாஜியும் ப்ரைம் டைம் ஷோ பண்ணிட்டு இருக்கோம். நிறைய நிறைய...நிறைய Awareness விஷயங்கள் பேசி இருக்கோம். எல்லாமே அதீத Involvement-ட தான் பண்ணி இருக்கோம். ஆனா எந்த ஷோ அன்னைக்கும்...இன்னைக்கு நடந்த ஷோ அளவுக்கு கை கால் நடுங்கி, தலைல கை வச்ச, கண்ணீர் கட்டுபடுத்தி.....என்னைக்கு பண்ணினதில்லை.

 "கோஷா" - ஹாஸ்பிடல்ல இறந்த குழந்தைய எலி கடிச்சு குதரினது பத்தின ஷோ. அரசு மருத்துவமனைகளின் அலட்சியம்தான் ??? கேள்வி. என்னைக்குமே இல்லாத அளவுக்கு இன்னைக்கு பேச பேச வந்த Callers அத்தனையும் பெண்கள். அவங்களோட வலி, அழுகை, ஆவேசம் தாங்க முடியாம பாட்டை குறைச்சு, நிறைய பேருக்கு பேச வாய்ப்பு கொடுத்து எவ்வளவு பண்ணினோம். ஒன்றரை மணி நேரத்துல ஐநூறு பேராவது வந்திருப்பாங்க பேசறதுக்கு. முடிஞ்ச அளவுக்கு எல்லாரையும் பேச வச்சோம்.

லீலானு ஒரு அம்மா பேசுறப்ப " இதே கோஷா ஆஸ்பத்திரியில பிரசவத்துக்கு அட்மிட் ஆனப்ப அவங்க கொடுத்த மருந்துல பனி குடம் உடைஞ்சு தண்ணி கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. டாக்டர்ஸ் யாருமே பாக்க வரல. கொட்டுற தண்ணியோட , டிரஸ் எல்லாம் நனைஞ்சு போய் நானே டாகடர் முன்னாடி நின்னப்ப அங்க இருந்த அத்தனை ஆம்பள டாகடரும் சிரிச்சாங்க. இதை மாதிரி எத்தன கேஸ் பாத்துருப்போம். போ...போய் படு....அப்படி சொல்லிட்டாங்க. ஒரு நாள் முழுக்க எந்த treatment-ம் கொடுக்காம மறுநாள் ஆபரேஷன் பண்ணி குழந்த எடுத்தாங்க. ரெண்டே நாள்ல என் குழந்த இறந்துருச்சு. என் குழந்தை இறந்தத விட, பனி குடம் உடைஞ்சு தண்ணியோட நின்ன என்ன பாத்து அந்த டாகடர்ஸ் சிரிச்சது இன்னும் வலிக்குது" னு அவங்க அழுதுட்டே சொன்னப்ப உசுர் போய்டுச்சு எனக்கும் பாலாஜிக்கும்.

படமா-னு ஒருத்தவங்க இதே "கோஷா" ஹாஸ்பிடல்ல டாக்டர்சோட பொறுப்பில்லாதனத்துனால, பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாடி இறந்து போன தன்னோட Twins நினச்சு அழுதப்பா வயித்தெரிச்சலா இருந்தது.

அடுத்து பேசின கீதானு ஒருத்தவங்க சொன்னது இது "குழந்த பிறக்கிற வலி பொறுக்க முடியாம கத்தினப்பா அங்க இருந்த நர்ஸ் எல்லாம் - புருஷன் கூட படுக்க்ரப்பா வலிக்கலையா... இப்ப மட்டும் கத்தர அப்படின்னு அசிங்கபடுத்தினாங்க பாலாஜினு" சொல்லிட்டு அழுதப்ப என்னாலயும் பாலாஜியாளையும் பேசவே முடியல.

இதெல்லாம் FB-ல என்னால எழுத முடிஞ்சா விஷயங்கள். Govt. Hospitals-ல நடக்குற இன்னும் நிறைய நிறைய நிறைய வலிகளையும் அசிங்கங்களையும் அவங்க சொன்னதா என்னால எழுத முடியல. இதெல்லாம் கேட்டப்ப புள்ள பெத்துகனும் அப்படிங்கற ஆசையே என்ன விட்டு போச்சு. சத்தியமா. ஆனா எல்லா அம்மாக்கள் மேலையும் ரொம்ப மரியாதை வந்துருக்கு. நிஜம்மா.////

கவிதா இதெல்லாம் கேட்டு நீங்க புள்ள பெத்துக்கணும்னு ஆசையே விட்டுப் போச்சுன்னு சொன்னதுதான் எனக்கு திக்குன்னுது. ஒரு நிகழ்வு எப்படி எல்லாம் மனுஷங்க மனசுல பயத்தைப் பதிய வைக்குது. அந்த அம்மாவின் மனநிலை எப்படி இருக்கும். நினைக்கவே கஷ்டமா இருக்கு.

இதையே முகநூலில் இருக்கும் இன்னொரு டாக்டர் நண்பர் இந்தவிதமா தன்னோட ஸ்டேடஸ் மெசேஜ் ல பகிர்ந்திருந்தார். என்னன்னா அவருக்கே இதே போல ஹவுஸ் சர்ஜனா இருக்கும்போது ஒரு முறை நைட் டூட்டியில் கவர்ன்மெண்ட் ஆஸ்பத்ரியில் தூங்கும்போது எலி கடித்ததா குறிப்பிட்டு இருக்கார்.மேலும்

 ///பொதுவா அரசு மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகிறார்கள். அங்கே இருக்கும் சுகாதாரக் கேடு மிக அதிகமானது. கழிவுகள் அடையும் இடங்கள் எலியை வளர்க்க ஊக்குவிக்கும் இடமாக இருக்கின்றன. சரியாக கவனிக்கப்படாமல் ஒரு குழந்தை எலி கடித்து இறந்ததாக சொல்லப்படுவது வருத்தத்துக்கு உரியது. குழந்தைகள் சரியான முறையில் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்தில் ஐயமேதுமில்லை.

ஆனால் மீடியாக்கள் அரசு மருத்துவமனைகள் பற்றி இப்படி ஒரு அபிப்ராயத்தைப் பெரிது படுத்தி பொது ஜனத்தின் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தியதே அதிகம். மிக அதிகமான வசதிகளும், மருத்துவ சாதனங்களும் அரசு மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு தனியார் மருத்துவமனையைவிட எல்லா மக்களுக்குமான மருத்துவ சிகிச்சை செலவுகள் குறைவு. இப்படி செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுவதால் மக்கள் கடனை உடனை வாங்கியாவது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வார்கள்.

எலிகளும், நாய்களும் சுற்றித் திரிவதாக சொல்றாங்க. இன்னிக்கு இந்தியாவில் இவை க்ளப்புகள், ஸ்டேடியங்கள், பள்ளிகள், ஏன் பார்லிமெண்ட் இருக்கும் இடத்திற்கு அருகிலும் கூடத்தான் சுற்றித் திரிகின்றன. இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். மீடியா இப்படியான விஷங்களோடு இதற்கான சரியான தீர்வு என்ன என்பதையும் பொதுமக்கள் அபிப்ராயமாகக் கேட்டு வெளியிட வேண்டும். ஒரு தனிப்பட்ட நிகழ்வை வைத்து சமூகம் அதற்கான தீர்வு கண்டுபிடிக்கவும் உதவ வேண்டும். ///

பார்க்கலாம். பிள்ளை பிறந்ததுக்கே பணம் வாங்கிக் கொண்டு சொல்லும் செவிலியர்கள், பணியாளர்கள் அரசு ஆஸ்பத்ரிகளில் பணி புரிவதாக சொல்றாங்க டிவியில். இன்னும் எல்லாவற்றுக்கும் காசு காசு என்று.. காடு அழைக்கும் வரை இவர்கள் சேர்க்கப் போவது என்ன , யாருக்கு, எதற்கு என்று சிந்தித்துப் பார்க்கட்டும்.

டாக்டர்களை தெய்வங்களாக மக்கள் எண்ணுகிறார்கள். அரசு மருத்துவமனைகள் பொதுமக்களின் உயிர்காக்கும் கோயில்களாக இருக்கின்றன. மாற்றம் மனங்களில் நிகழ வேண்டும்.மகப்பேறு மருத்துவமனைகள் மரணக்கிடங்குகளாக இல்லாமல் மனிதம் பெருகும் இடமாக மாறட்டும்.

வாய்ப்பு..

என்னுடைய வாய்ப்பு
அவளுக்கு வழங்கப்பட்டது
நானே காரணமாயிருந்தேன்
அதன் ஒவ்வொரு அசைவுக்கும்.

அவளை சிலாகித்தேன்
அவளின் ஏக்கங்களை விவரித்தபடி.
காற்றில் கண்டம் விட்டுக்
கண்டம் செல்லும்
புரவிப்பெண்ணாக
அவள் உணரும் தருணங்களை..

ரேகைகளும் பாகைகளும்
தொடாத அவளது
ஆழிப்பேரலையான
அனுபவத்தை விவரித்தபடி.

விண்ணோக்கி நகரும்
ஊர்தியில் அவளை ஏற்றியநான்
ஏணிப்படியாயிருந்தேன்.,
மிதித்துச் செல்லட்டுமென.

ஏற்றிவிட்ட பெருமிதத்தில்
சுகித்தபடி இருந்தேன்
என்னுடைய இடத்திலேயே
என் வலியை ரசித்தபடி.

டிஸ்கி:- இந்தக் கவிதை 24, ஜூலை 2011 திண்ணையில் வெளிவந்தது.


வியாழன், 30 ஆகஸ்ட், 2012

பாரதத்தின் பெருமை.. பங்கஜ் அத்வானி. PROUD OF INDIA - PANKAJ ADVANI..!!!

பங்கஜ் அத்வானி.. பெருமையுடன் உச்சரிக்க நினைக்கும் பெயர்.. 16 வது ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் (ஏஷியன் கேம்ஸ் கோல்ட் மெடலிஸ்ட்) ஆண்களுக்கான இங்கிலீஷ் பில்லியர்ட்ஸில்( MEN'S ENGLISH BILLIARDS CHAMPIONSHIP) தங்கம் வென்றவர். பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கரில் 7 வேர்ல்டு டைட்டில்களை வென்றவர். 4 நாள் முன்பு இவர் விளையாடியதை ஸ்போர்ட்ஸ் சானலில் பார்த்தேன். மியான்மரின்  OO Nay Thway வை மிக அருமையாக ஆடி வென்றார்.

ஜூலை 24, 1985 இல் பிறந்த இவர் பூனேயை சேர்ந்தவர். முதலில் குவைத்தில் இருந்த இவர் குடும்பம் பெங்களூருவுக்கு வந்ததும் அங்கே ஃப்ராங்க் ஆண்டனி பப்ளிக் பள்ளியில் படித்தார். மகாவீர் ஜெயின் கல்லூரியில் பி. காம் படித்தார். இவருக்கு பயிற்சி அளித்தவர் முன்னாள் தேசிய சாம்பியனான அரவிந்த் சௌர் ஆவார். 12 வயதில் இருந்து மாநில , மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்றிருக்கிறார். 2003 இல் இருந்து விளையாடி வருகிறார். ஆகஸ்ட் 73இல் அதிகபட்ச ராங்கிங்கும், ( 73), அதிகபட்ச ப்ரேக்கும் ( 143- ஸ்நூக்கர், 876 -- பில்லியர்ட்ஸ்) கொடுத்தவர் .

இவர் நம் தேசத்துக்காக பங்கேற்று வெற்றிபெற்று பெருமை சேர்த்தவர் என்பதால் இவருக்கு 2009 இல் பத்மஸ்ரீ வழங்கப்பட்டிருக்கிறது. ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது 2006 இலும், அர்ஜுனா விருது 2004 இல் வழங்கப்பட்டிருக்கிறது.

 IBSF டைட்டில்களை 6 முறையும், grand double போட்டிகளிலும், ஒரே சீசனில் 5 பில்லியர்ட்ஸ் போட்டிகளிலும் வென்றிருக்கிறார். ஜூனியர், சீனியர் தேசிய சாம்பியன்ஷிப், ஏசியன் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் வேர்ல்டு பில்லியன் சாம்பியன் ஷிப் ( time format and point format) , WORLD PROFESSIONAL BILLIARDS TITLE -- WPBSA என எல்லாவற்றிலும் வென்றிருக்கிறார். 7 வேர்ல்டு, 5 ஏஷியன்ஸ், 2 ஏஷியன் கேம்ஸ் கோல்டு, 1 ஆஸ்த்ரேலியன் ஓபன் மற்றும் 1 ஏஷியன் டீம் ஆகிய டைட்டில்களை வென்றிருக்கிறார்.

{பொதுவாக ஸ்நூக்கர், பில்லியர்ட்ஸ், விளையாட்டுக்களை தொலைக்காட்சியில் கண்டு களிப்பதுண்டு. ஒரு முறை முணாறு ஸ்டெர்லிங் ரெசார்ட்டில் தங்கி இருந்தபோது விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. காரம்போர்டு போலவோ, கம்ப்யூட்டரில் நெட்லாகில் விளையாடும் பூல் கேம் ( POOL GAME ) போலவோ இல்லை அது. மிகுந்த முயற்சியும் பயிற்சியும் தேவை. நாம் ஒன்றை எய்ம் செய்ய அது வெறொன்றில் பட்டு அதிர்ஷ்டவசமான ஏதோ ஒரு பாக்கெட்டை சென்றடையும்.!

9 பால் டூர், ஸ்நூக்கர் ரெட் வைக்கப்படும் 15 பால் கொண்ட பில்லியர்ட்ஸ் விளையாட்டை பொதுவாக ரசித்திருக்கிறேன். தாய்லாந்து, பாங்காங்க் போன்ற நாடுகளின் வீரர்கள்தான் ஜெயித்து பார்த்திருக்கிறேன். இந்த முறை ஒரு இந்தியர் விளையாடி ஜெயித்ததைப் பார்த்ததும் மிகுந்த பெருமித உணர்வு ஏற்பட்டது.

 9 பால் டூரில் ( 9 BALL TOUR) மஞ்சள், நீலம், சிகப்பு, வயலெட், ஆரஞ்ச், பச்சை, மெரூன், கறுப்பு, பசும் மஞ்சள் என்ற நிறப்படியும், ( ஒன்றிலிருந்து ஒன்பது வரை எண் இடப்பட்டு இருக்கும்) பாக்கெட்டில் விழச் செய்ய வேண்டும். இதே சிகப்பு பால் 15 கொண்ட பில்லியர்ஸில் 15 ஐயும் எப்படி வேண்டுமானாலும் பாக்கெட்டில் விழுமாறு அடிக்கலாம்.

இங்கிலீஷ் பில்லியர்ட்ஸில் 3 பந்துகள் மட்டுமே. இது முதலில்யுனைட்டட் கிங்டத்தில் அறிமுகமானது. இது ஒரு பச்சை நிற டேபிளில் விளையாடப்படும். இதை விளையாட ஒரு ராக், ஒரு ட்ரைஆங்கிள், சாக், வுட்டன் ( WOODEN STICK) ஸ்டிக், பில்லியர்ட்ஸ் க்யூ தேவைப்படும். இதிலும் 6 பாக்கெட், 3 பந்துகள் - 1 சிகப்பு, 2 வெள்ளை. அதில் ஒன்று க்யூ பால் எனப்படும். பில்லியர்ட்ஸ் க்யூவை வைத்து க்யூ பாலால் மற்ற இரண்டு பால்களையும் ஹிட் செய்யவேண்டும் அல்லது பாக்கெட்டில் விழும்படி செய்யவேண்டும். தேவைப்பட்டால் வுட்டன் ஸ்டிக்கை உபயோகித்து அடிக்கலாம். இதற்கு 3, 2 எனப் பாயிண்டுகள் உண்டு. ஒவ்வொரு ப்ரேக்கிலும் எடுக்கும் மதிப்பெண் யாருக்கு முதலில் 100 ஐ அடைகிறதோ அவருக்கு வெற்றிதான். }

ஒவ்வொரு முறையும் மியான்மரின் OO Nay Thway சிறப்பாக ஆடினார். ஆனால் பங்கஜ் அத்வானியின் ஆற்றலும் அதிர்ஷ்டமும் அன்று அருமையாக இருந்தது. ஒவ்வொரு முறை அவர் தவறவிடும்போதும் அடடா என வருத்தமளிக்கும். அடுத்த ஹிட்டை மியான்மரின் OO Nay Thway அடிக்கமுடியாமல் லேசாக ஹிட் செய்து விட்டுப் போகும்போதுதான் தெரியும் அது எவ்வளவு கஷ்டமான ஷாட் என்று.

மிக அருமையாக விளையாடிய பங்கஜ் அத்வானிக்கு விருது அணிவிக்கப்பட்டு, பூங்கொத்து வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டபோது நம் இந்தியக் கொடி உயரத்தில் ஏற்றப்பட்டது பார்த்ததும் அவரின் கண்கள் லேசாக கலங்கியது. கண்டம் ஒரு முறை உயர்ந்து எழுந்தது. அந்தப் பரவசமெல்லாம் நமக்கும் ஏற்பட்டது..

ஜன கண மண ஒலிக்க அவர் வெற்றி மேடையில் நின்றபோது அட்டென்ஷனில் வீட்டிலேயே நின்ற எனக்கும் நானே வென்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. உண்மைதான். நிறத்தால், மொழியால் மாநிலங்களால் நாம் பிரிவுபட்டிருந்தாலும் நம் தேசியக் கொடியை உயரச் செய்து, நம் தேசிய கீதத்தை ஒலிக்க வைத்து நாம் ஒரு தாயின் பிள்ளைகள் , நாம் இந்தியர் என்ற பெருமித உணர்வை எழச்செய்த பங்கஜ் அத்வானிக்கு .. தங்கம் பெற்ற தங்கத்துக்கு.. பெருமித வாழ்த்துக்கள். !!!

அவரைக்கொடிகள் இலவமாய்..

இறுக்கங்களுடன்
பயணித்து வந்தேன்.
எப்படி இறுக்கம்
தூர்ப்பதென அறியாமல்.
வினைகளை அற்று
வீழ விரும்பினேன்.
வகிர்ந்து வகிர்ந்து
வார்த்தைகளைத் தூவினாய்.
அதைப்பிடித்துக்
கொடியாக வளர்ந்தேன்.
அவரை கொடிபிடித்து
மேகம் துளைத்துப்
பாதை அமைத்ததாய்
இன்னொரு உலகம்
இழுத்துச் சென்றாய்
வானவில்லைப் பற்றி
நடனமாடியபடி வந்தேன்.
சித்திரக் குள்ளர்களும்
பழச்சோலையும்
நி்றைந்திருந்தது.
மாயாவிகளும்
கௌபாய்களும் ததும்பிய
கேளிக்கை அரங்குகள்.
பார்த்திபனின் கனவை
குகை ஓவியமாக
களித்தபடி தீப்பந்தத்தில்.
மூலிகைக் காற்றோடு
ஓசோனை சுவைக்கத்
தந்தாய் அமிர்தமாய்.
மூச்சு முட்டத்
தும்மிய போது
பஞ்சு வெடித்தது.
இலவத்தைப்போல
பறந்தபடி வந்தேன்
இன்னொரு விதை சுமந்து.

டிஸ்கி :- இந்தக் கவிதை 24, ஜூலை 2011 திண்ணையில் வெளிவந்தது. 


புதன், 29 ஆகஸ்ட், 2012

இளம்பாடலாசிரியர் பத்மாவதி.

ஒரு பாடலாசிரியருக்கு என்ன வயதிருக்கலாம். அவர் என்ன படித்திருக்கலாம். சொல்லுங்கள். சின்னத்தாமரையைப் போல அழகான இந்தப் பாடலாசிரியர் பொறியியல் படித்தவர். ஃபர்ஸ்ட் க்ளாசில் டிஸ்டிங்க்‌ஷனில் கோல்ட் மெடலிஸ்ட். மிகச் சிறுவயதுப் பாடலாசிரியர்.. வயது 25 தான். நம்ப முடியவில்லை அல்லவா., இவர் பெயர் பத்மாவதி.இவரின் முதல் பாடல் வெளிவந்த படம் இயக்குநர் பரத்தின் ”நீதானா அவன்”. இசையமைப்பாளர் தஷி. அந்தப் படத்தில் இவர் எழுதிய பாடல் ஒரு டூயட் பாட்டு.. “ தாவணிப் பொண்ணுன்னு” எனத் தொடங்கும் பாடல். உதயம் தியேட்டரில் அமர்ந்து இந்தப்படத்தைப் பார்க்கும் போது பாடலாசிரியர் என்று இவர் பெயர் வந்ததும் இவரின் மகிழ்ச்சி எப்படி இருந்திருக்கும். இது பற்றி செய்தித் தாள்களிலும் வந்தது. இந்த உயரத்தை எட்டியது எப்படி என அவரிடம் கேட்டோம்.

இவரின் அப்பா பெயர் வெங்கடரமணன். அம்மா மதுராம்பாள். பூர்வீகம் திருச்சி. தங்கை காயத்ரி கெஸ்ட் லெக்சரராகப் படித்துக் கொண்டே பணிபுரிகிறார். இவர் படித்தது B.E., I.T., கோவை பிஎஸ்ஜி டெக்கில் படித்துள்ளார். இந்தக் கல்லூரியில் இடம் கிடைப்பது கடினம். அப்பா அம்மா நீதித்துறையில் இருந்ததால் லா படிக்க வைக்க நினைத்திருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்திலேயே ப்ளஸ்டூவில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மாணவியாகத் தேறியதால் கோவை பிஎஸ்ஜி டெக்கில் படிக்க இடம் கிடைத்தது.

பாடலாசிரியராக வரவேண்டும் என்ற கனவை அது கொஞ்சம் சிதைத்ததாகச் சொல்கி்றார் இவர். இவர் பி ஏ தமிழ் எடுத்துப் படிக்க நினைத்திருக்கிறார். அதிக மதிப்பெண் எடுத்துவிட்டதால் லிட்டரேச்சரில் சேர்க்காமல் என்ஜினியரிங்கில் சேர்ந்த்திருக்கிறார்கள். தமிழ் படிக்க முடியாததால் தன்னுடைய பாடலாசிரியர் கனவு கனவுதான் என நினைத்தவருக்கு விஜய் டிவியின் ”தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு ”ஒரு வெளிச்சம் தந்தது. அதில் வளையாபதி பற்றி பேசியபோது நெல்லை கண்ணன் சொன்னாராம், தமிழ் படித்தவர்களை விட அழகாக வெண்பாக்களைச் சொன்ன பத்மாவதிக்குப் பாராட்டுக்கள். அது ஒரு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்ததாம். தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்காமலும் இலக்கியத்தில் பணி செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தந்ததாம்.

இவரின் அம்மாவுக்குத் தமிழ் ஆர்வம் அதிகம். கல்லூரியில் நிறைய பேச்சுப் போட்டிகளில் ., கவிதைப் போட்டிகளில் இவர் கலந்து கொள்ளும் போது இவரின் தாயார்தான் குறிப்புகள் எடுத்துக் கொடுப்பாராம். விசுவின் ”மக்கள் அரங்கம்” நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியின் ”அழகிய தமிழ் மகளில் ” பேசி இருக்கிறார். இது எல்லாம் வேலை செய்யும் போது கலந்து கொண்டது.

என் பெயரிலேயே பத்ரிக்கைகளில் கவிதைகள்., தினமலர்., தினத்தந்தி போன்றவற்றுக்கு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். நிறைய மேடைகளில் பேசும்போது வேறு கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டாமல் என்னுடைய கவிதைகளையே மேற்கோள் காட்டுவேன். அப்போது என் ஃப்ரெண்ட்ஸ் இதை எல்லாம் ஒரு புத்தகமாகப் போடு. உன் கவிதைகளை மற்றவர்கள் எடுத்து போடுறாங்க. அதுனால புத்தகமா கொண்டுவான்னு சொன்னாங்க. அருண் பாரதி என்பவரின் தமிழ் அழை பதிப்பகம் மூலமா 2009 இல் என் முதல் கவிதைததொகுதி “கைத்தலம் பற்றி” .

புத்தகக் கண்காட்சிக்குப் பத்து நாளைக்கு முன்னால் இவரின் தந்தைக்கு மாரடைப்பு வந்து ஹாஸ்பிட்டலைஸ் செய்யப்பட்டார். நண்பர்களின் முழு உதவியோடும் ஒத்துழைப்போடும் 2010 ஜனவரி ஒண்ணாம் தேதி புத்தாண்டுப் பிறப்பன்று இவர் புத்தகம் வெளியிடப்பட்டது.

புதிய பார்வை., பாக்யா., தினமலர்., தினத்தந்தி எல்லாவற்றின் விமர்சனத்திலும் இந்தப் புத்தகம் பற்றி வாழ்த்தப்பட்டது. அதன் மூலம் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. அது வெண்பா போலவும் , மெட்டுக்கு ஏற்றபடி இருப்பதாகவும் பலரும் சொன்னார்கள். இது சினிமா பாட்டை ஒத்திருந்ததாகச் சொன்னார்கள். இருந்தாலும் இவருக்கு தன்னால் இதை எல்லாம் பண்ண முடியுமா முடியாதா எனக் குழப்பமாக இருந்ததாம்.

எல்லாக் கலைகளுக்கும் குருவிடம் சென்று பயில்வார்கள். ஆனால் சினிமாத்துறையில் இந்தத் துறைக்கென்று பயிற்சி எதுவும் கிடையாது. எனவே இவர் தானாகவே மெட்டுக்குப் பாட்டெழுதப் பழகினார். இதைத் தொழிலாகப் பண்ணமுடியாது என அனைவரும் நினைத்தார்கள். ஒரு பெண் இரவு நேரமோ., அதைத் தாண்டிய நேரமோ இதைப் பண்ண முடியாத சூழல். அசென்சரில் பணி புரிந்து வந்தார். கை நிறைய சம்பளம் . நல்ல வேலை. நிரந்தரமான வேலையை இழக்க யோசனை. எனவே 3 மாதம் ’லாஸ் ஆஃப் பே’ யில் லீவு போட்டுவிட்டு நிறைய நாள் காலை ., மாலை., பகல் ., இரவு என எல்லா நேரத்திலும் அம்மா சொன்னபடி கிட்டத்தட்ட 300, 400 பாடல்களின் மெட்டுக்களை எடுத்துக் கொண்டு இவரே வரிகளை எழுதிப் பழகினார். இவருக்கு நிறைவு வந்த பிறகு சினிமாவுக்காக எழுதத் துவங்கினார். நிறைய இயக்குனர்கள்., இசையமைப்பாளர்களைப் பார்க்க குரோம்பேட்டையிலிருந்து சாலிக்கிராமம் வரை தினமும் பயணம் செய்துள்ளார். மதிய உணவை அருகாமையில் இருக்கும் ஒரு பூங்காவில் சாப்பிடுவார்.

இதன் நடுவில் தினமலர் நாளிதழில் வெள்ளி மலரில் ,”அமிர்தவர்ஷினி” என்ற ஒரு நாவல் 22 வாரம் தொடர்கதையாக வந்தது.குங்குமத்தின் குங்குமச்சிமிழில் என்னுடைய ,”இடம்பெயர்தல்” என்ற சமூகநாவல் வெளியிட்டார்கள். அதன் பின் வீரன் செல்வராஜ் இயக்கிய ,”தாய்” குறும்படத்தில் ஆராரோ பாடினேனே அழகான ராஜா., கால்கோடி வைரம் நீயடா” என்ற பாட்டை எழுதினார்.இதை வெளியிட்டவர் டைரக்டர் எஸ்.வி.சந்திரசேகரன். பெற்றுக்கொண்டவர் ராசு.மதுரவன்.

 “மழைத்துளிகள்” என்ற இசைஆல்பத்தில் 3 பாடல்கள் இவருடையது வெளியானது.மிகப் பெரிய அங்கீகாரம் என்னவென்றால் சாகித்ய அகாடமியின் கலைவிழாவில் நடந்த கவியரங்கத்தில் நெல்லை ஜெயந்தா., தமிழமுதன்., மற்றும் ஈரோடு தமிழன்பன் தலைமையில் “யுகபாரதியுடன் “அமர்ந்து பேசியது மறக்க முடியாதது என்று சொன்னார். தான் யாருடைய பாடல்களை அதிகம் கேட்டு ரசித்தோமோ அவர்களோடு சரிசமமாக மேடையில் அமர்ந்து ”இரவீந்தர் என் கனவில்” என கவிதை சொன்னது மிகப் பெருமை தந்தது எனக் கூறுகிறார்.

இதுபோல குறும்படம்., ஆல்பம் முயற்சிகளை அறிந்த இயக்குநர் பரத் “நீதானா அவன்” படத்தில் வாய்ப்பளித்துள்ளார். அப்புறம் வேறு பட முயற்சிகளுக்கான சில சந்திப்புக்களும் சந்தர்ப்பங்களும் சரியா வாய்க்கவில்லை. ஒரு எதிர்பாராத சந்திப்பு ஒரு பாராட்டு டைரக்டர் சங்கரிடமிருந்து கிடைத்தது ., அது ஒரு அறக்கட்டளைக்கான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போயிருந்தபோது இவர் பேச்சைக் கேட்டு சங்கர் மிகவும் பாராட்டியது ஆகும்.

”சோளக்காட்டு பொம்மை” திரைப்படத்துக்கு வாய்ப்பு கிடைத்தது. விதைக்கும் போது பாடப்படும் ஒரு பாடலை அந்தப் படத்தில் இவர் எழுதி இருக்கிறார். இந்தப் படத்தில் விவேகாவும் இவரும் எழுதி இருக்கிறார்கள். இது நவம்பரில் வெளியாகிறது.

சாஃப்ட்வேர் இஞ்சினியராக இருந்தாலும் ஆங்கிலத்தில் பாட்டெழுதுவதில்லை., மேலும் இரட்டை அர்த்தம் உபயோகிக்கிறமாதிரி பாட்டெழுதுவதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதாகாக் கூறினார். இதனால் பல வாய்ப்புக்கள் கைவிட்டுப் போயிருக்கின்றன.

யாரடா நீ மன்மதா என்ற படத்தில் அறிவுமதி., பழனிபாரதி மற்றும் இவரும் பாடல்கள் எழுதி இருக்கிறார்கள்.

சென்னைப் புற நகர் என்ற படத்தில் 3 பாடல்கள் எழுதி இருக்கிறார்.

முக்கியமான விஷயம் என்னவென்றால்., சிங்கை பதிவர்கள் மணற்கேணி என்ற போட்டியை நடத்திய போது நாட்டுப்புற இலக்கியம் சார்பா ஒரு கட்டுரையை இவர் சமர்ப்பிக்க.. அதுக்கு பரிசா ஒரு வாரம் சிங்கப்பூர் செல்லும் அதிர்ஷ்டம் கிடைத்தது. இவர் தன் தந்தையுடன் சென்று சிங்கையை சுற்றிப் பார்த்திருக்கிறார். அந்தப் பதிவர்கள் சிறப்பாக கவனித்துக் கொண்டதாக சொன்னார்.

இதுக்கெல்லாம் காரணம் இவர் ஒரு மாதம் தன்னுடைய கிராமத்துக்கு சென்று தங்கி நாட்டுப்புறப்பாடல்களை., விபரங்களை தொகுத்ததுதான். எனவே. எதை செய்ய ஆசைப்பட்டாலும் பயிற்சியோடு., முயற்சியோடு செய்யுங்கள். வெல்வீர்கள்.

டிஸ்கி:- போராடி ஜெயித்த பெண் ( 16) பத்மாவதி பற்றிய இந்தக் கட்டுரை டிசம்பர் 2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தது.


செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

மழை முத்தம். ஆனந்தவிகடன் சொல்வனத்தில்

சொட்டு முத்தங்களால்
வாளியை நிரப்புகிறது
குட்டி மழை.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 27.6.2012 ஆனந்தவிகடன் சொல்வனத்தில் வெளியானது.


திங்கள், 27 ஆகஸ்ட், 2012

களவும் கற்று பற. {கவிதை.} ஆனந்தவிகடன் சொல்வனத்தில்..

கவுச்சி வீச்சமடிக்கும்
சமையறை ஜன்னல் கதவைத்
தட்டியபடி காத்திருக்கின்றன
நான்கு காக்கைகள்.
துணியுலர்த்த வந்த பெண்
கைகொண்ட க்ளிப்புக்களை
வர்ண மிட்டாய்களாய்
எண்ணிச் சுற்றுகின்றன.
தினமும் ஒரு கைப்பிடி
கஞ்சியோ, அப்பளமோ
சின்னவன் தின்ன இட்லியோ
போடுகிறாள் அவளும்
அவை ஏமாறாமலிருக்க..
அரிசிச் சோறுண்டால்
அலறி அழைக்கும்
அண்டங்காக்கைகள்
ரொட்டி கண்டால்
யாருக்கும் அளிக்கப்
பிரியப்படாமல்
இறகு விரித்து மறைத்து
அலகு கொள்ளாமல்
அள்ளிப் பறக்கின்றன.

டிஸ்கி:-  23.5.2012 ஆனந்தவிகடன் சொல்வனத்தில் வெளியானது.

சனி, 25 ஆகஸ்ட், 2012

குற்றம். சிறுகதை குங்குமத்தில்

மீனு ஆண்டி வந்தா ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க.. எதுலடா குத்தம் கண்டுபிடிக்கலாம்னு கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுப் பார்ப்பாங்க.. அதுக்கு இன்னிக்கு இடம் கொடுக்கவே கூடாது.

வீட்டை பம்பரமாக சுற்றி சுற்றி க்ளீன் செய்தாள் ராஜி. டி. வி ஸ்டாண்ட்., கம்யூட்டர் டேபிள்., ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி என்று பார்த்து பார்த்து துணியையும் டஸ்டரையும் வைத்து படு சுத்தமாக்கினாள்.

வாசனை பெட்ஸ்ப்ரெட்., பளிச்சென்று இருக்கும் திரைச்சீலைகள்., வண்ண நூல் க்ரோஷாவில் சோபா உறைகள் எல்லாம் பர்ஃபெக்ட்.

கிச்சன் சிங்க்., பாத்ரூம் டைல்ஸ்., சமையல் மேடை., வீடு., வாசல் எல்லாமே பளபளாவென மின்னியது.

 ”வரட்டும்.. இந்த முறை மீனா ஆண்டி வந்தா ஏதுமே சொல்ல முடியாமல் வாயடைச்சு போகணும் ..” என்ற நினைப்பே குதூகலத்தைக் கொடுத்தது அவளுக்கு.

மாலையில் மீனு ஆண்டி வந்தே விட்டாள்., தன் வெளிநாட்டுப் பேத்தி மாலுவுடன்..

வீட்டினுள் நுழைந்ததில் இருந்து எல்லா இடத்தையும் இன்ஸ்பெக்‌ஷன் இடுவது போல பார்த்த மீனு ஆண்டியே ஒன்றும் குறை சொல்ல முடியாமல் அமர்ந்திருப்பது சந்தோஷமாயிருந்தது ராஜிக்கு.

ராஜி கொடுத்த பனீர் பகோடாவை சாப்பிட்ட மாலு ., ”ஆண்டி எண்ணையா இருக்கு. டிஷ்யூ கொடுங்க” என்றாள். ” டிஷ்யூ இல்லையேடா” என்று ராஜி சொன்னதும் குற்றம் சொல்ல காரணம் கண்டுபிடித்த மீனு ஆண்டி வழக்கம் போல குஷியுடன் அட்வைஸ் சொன்னாள். ”டிஷ்யூ எல்லாம் வாங்கி வச்சுக்கணும் ராஜி. இவ்வளவு ஆய்லியா சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வந்துரும்..”

வழக்கம்போல் மீனு ஆண்டியின் குற்றப்பத்ரிக்கையை கேட்டதும்., ‘சே.. ஜஸ்ட் இதுல போய் மிஸ் பண்ணிட்டமே’ என விழித்தாள் ராஜி..


டிஸ்கி:- இந்தச் சிறுகதை 23.1. 2012 குங்குமத்தில் வெளிவந்தது.


வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஆன்மாவின் உடைகள்..

வெள்ளுடை
தேவதைகளையும்
செவ்வுடை
சாமிகளையும்
மஞ்சளுடை
மாட்சிமைகளையும்
பச்சை உடை
பகைமைகளையும்

படிமங்களாய்ப்
புதைத்தவற்றை
வர்ணாசிர தர்மமாய்
வெளியேற்றும்
ப்ரயத்னத்தில்..
 ப்ரக்ஞையோடு
போராடித்
தோற்கிறேன்..

விளையாட்டையும்
வினையாக்கி
வெடி வெடித்துத்
தீர்க்கிறேன்..
எப்போது உணர்வேன்
வண்ணங்களை..,
அழுக்கேறாத
ஆன்மாவின் உடைகளாய்.

 டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூலை 3,2011 திண்ணையில் வெளியானது.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

வேர் பாய முடியாத செடிகள்..

நெருப்புப்பொறி பறக்க
சந்திப்பு நிகழ்ந்தது
ஒரு எதிரியோடோ
முன்ஜென்ம விரோதியோடோ
உராய்ந்து திரிந்து
இந்த ஜென்மத்தில்
ஏன் கண்டுபிடித்தாய்
என்ற கண்டனத்தோடு.

பாலை தேசங்களில்
மண்ணைப் பதியமிட்டு
செடிகளைச் செருகி
நீரூற்றில் நனைந்து
பசியக் கிடந்தாலும்
காலூன்ற முடியாமல்
வேக்காளமும் தாக்க
கருகும் அல்லது
அணுங்கும்.

ஒவ்வொரு முறையும்
செடிகள் வருவிக்கப்பட்டு
பதியமிடப்படும்
மண்ணோடு..
மண் ஊன்ற விழைந்தாலும்
வேர்பாய முடியாத செடிகள்
வாழும்வரை பூப்பூத்து மடியும்
வெவ்வேறு இடங்களில்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 16 ஜுலை 2011 திண்ணையில் வெளியானது

புதன், 22 ஆகஸ்ட், 2012

ஓடுகளாய்...

ஒரு சந்திப்புக்குப்
பின்னான நம்பிக்கைகள்
பொய்க்காதிருந்திருக்கலாம்.
தூசு தட்டித் தேடி
எடுக்கப்பட்ட கோப்புகளில்
இருந்து பெய்யும்
எண்ணத் தூறல்களில்
நனையாது இருந்து
இருக்கலாம்.
எங்கோ அகதியாய்
விட்டு வந்த
நிலக்கோப்புகளை
பராமரித்துப் பொடியாய்
அடுக்காதிருந்திருக்கலாம்.
பழையனவற்றில்
நனைவதும், மூழ்குவதும்
தவிர்க்கயியலா போதுகளில்
திசைவிட்டு திசை நகர்ந்து
குடியிருப்பை அமைக்கும்
சிலந்தியை காணுவதும்
தவிர்க்கப்பட்டிருந்திருக்கலாம்.
இதுதான் என தீர்மானித்தபின்
உயிர்வாழ்வதும்
மரணிப்பதும்
ஓட்டுக்குள்ளே அடுக்கப்பட்ட
ஓடுகளாய் சரியும்வரை.

டிஸ்கி :- இந்தக் கவிதை 16 ஜூலை, 2011 திண்ணையில் வெளியானது. 


சனி, 18 ஆகஸ்ட், 2012

திருதிரு துறு துறு பட டைரக்டர் நந்தினி ஜேஎஸ்.

ஒரு பெண் சாதாரணமா என்னென்ன ஆசைகள் வைத்துக் கொள்ளலாம். நல்லா படிச்சு, இஞ்சினியராகலாம்., டாக்டராகலாம். பைலட்டாகலாம்., ஸ்பேசுக்கு கூட போகலாம். ஆனா ”திரு திரு துறு துறு” பட டைரக்டர் நந்தினி ஜேஎஸ் ஒரு நடிகையாக ஆக இல்லை., நடிகர்,நடிகைகளை ஆட்டுவிக்கும் ஒரு டைரக்டரா ஆக ஆசைப்பட்டார். அதுவும் எப்படி நடிப்புத் தொழிலுக்கே சம்பந்தமில்லாத குடும்பத்தில் பிறந்து ஜெயித்தார் என இந்த மாதம் பார்ப்போம்.

உங்க கொள்கைகள்ல உறுதியா இருந்தீங்கன்னா ஜெயிப்பீங்க என்பதற்கு நந்தினி ஒரு உதாரணம். அப்பா ஜெயாநந்தன் எல் ஐ சியில் டெவலப்மெண்ட் ஆஃபீசர். அம்மா கிரிஜா க்வீன் மேரீஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியை. தம்பி முருகானந்தம் பல் மருத்துவர். சினிமாவுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் சம்பந்தமேயில்லை. சாதாரணமா இந்த மாதிரி குடும்பங்களில் பெண்ணைப் படிக்க வைத்து திருமணம் செய்து வைப்பார்கள். அதிக பட்சம் அவர் ஏதாவது வேலைக்கு போனால்போவார் . பின் பிள்ளைகுட்டி பிறந்து அவர்களைப் படிக்கவைத்து அம்மாஸ்தானத்தில் மட்டும்தான் இருக்க முடியும். இதற்குத்தானா தான் பிறந்தது. இது அல்ல தனது பணி.,பிறந்ததற்காக ஏதாவது சாதிச்சிட்டு போக வேண்டாமா. அதன் பின் தான் மண வாழ்க்கை குழந்தை குடும்பம் எல்லாம். என நினைத்தார். நினைத்ததை செயல் படுத்தினார்.

பள்ளியிலேயே ட்ராமா, பாட்டு, டான்ஸ் எல்லாம் இண்டரஸ்ட். படிக்கும் காலத்திலேயே ட்ராமாக்கள் எழுதி இயக்கி இருக்கிறார் படிப்பை விட அது கொடுத்த சந்தோஷம் மிக அதிகமாய் இருந்ததாம். கதை சொல்ல இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். இவரைச் சுற்றி அதற்காகவே எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். சுவாரசியமான கதை சொல்லிகளை நமக்குப் பிடிக்கும்தானே.

ஆசான் மெமோரியல் பள்ளிக்கரணையில் பி பி ஏ முடிச்சிட்டு 3 வருஷம் தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் டி எஃப் டி படித்தார். வீட்டில் முதலில் ஆதரவு கொடுக்காத போதும் பின் டைரக்டராவதுதான் இவரது குறிக்கோள் என உணர்ந்ததும் படிக்க வைத்தனர். எல்லா உத்யோகங்களிலும் தொந்தரவுகள் இருக்கு, மோசமான ஆட்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள். பல்லவன் பஸ்ல ஏறும்போது கூட பிரச்சனை இருக்கும். நாம பழகும் விதம் பொறுத்துத்தான் எல்லாரும் நம்மிடம் பழகுவார்கள். நாம ஸ்ட்ரிக்டா இருந்தா யாரும் நம்மை அணுக முடியாது. குறுக்கு வழியில் நான் என்றும் போக மாட்டேன் என சொல்லி இருக்கிறார். அப்புறம் இவர் அங்கு கோல்ட் மெடலிஸ்ட் ஆகி இருக்கிறார். மேலும் ஓட்டம் என்ற குறும்படத்துக்காக இரண்டு ஸ்டேட் அவார்டு வாங்கி இருக்கிறார். டைரக்‌ஷன் மற்றும் எடிட்டிங்குக்காக.

பிபிஏ படிக்கும் போது நண்பரானவர் சுக்தேவ். பெங்காலி. அப்போது எம் பி ஏ படித்த இவரை 96 இல் என் ஐ ஐ டியில் கம்ப்யூட்டர் படிகும்போது சந்தித்திருக்கிறார். இருவருக்கும் நேசம் மலர்ந்தபோது தனக்கு டைரக்டராகவேண்டும் என்று ஒருகுறிக்கோள் இருப்பதை சொல்லி இருக்கிறார். அதற்கு அவரும் தன் சப்போர்ட் செய்வேன் என உறுதியளித்தாக பெருமையாக கூறினார். அதன் பின் திருமணம் நடந்தது.

பிலிம் இன்ஸ்டிடியூட் படித்தபின் அசிஸ்டெண்ட் டைரக்டராக முயற்சித்திருக்கிறார். அப்போது அதிகம் பெண்கள் யாரையும் துணை இயக்குனராக வைத்துக் கொள்வதில்லை. திருமணம் ஆனால் குழந்தை குட்டி என சென்று விடுவார்கள்ஏனெனில் இது டைம் பார்க்க முடியாத வேலை. இரவு பகல் எந்நேரமும் வேலை நிமித்தம் கூப்பிட்டால் உடனே போக வேண்டும். வெவ்வேறு லொகேஷன்களில் தனியாக பணியாற்ற வேண்டும். இதுதான் பார்ப்பேன் இது பார்க்க முடியாது என சொல்ல முடியாது.

ஃபிலிம் இன்ஸ்டிடியூட் என்பதால் கண்டநாள் முதல் படம் எடுத்தபோது டைரக்டர் பிரியாவிடம் அசிஸ்டெண்டா வேலை செய்திருக்கிறார். எல்லா டிபார்ட்மெண்டிலும் வேலை செய்தாராம். ஸ்கிரிப்ட், டயலாக், ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன், லொகேஷன் தேடுதல், செட் ப்ராபர்ட்டீஸ், டயலாக் ப்ராம்ப்ட் டெலிவரி, லிரிக்ஸ், ( தாமரை எழுதும்போது கூட இருந்திருக்கிறார்). காஸ்ட்யூம்ஸ் 9( லைலாவுக்கு ட்ரஸ் டிசைன் பண்ணும் போது ) எடிட்டிங், சாங் ரெக்கார்டிங், என எல்லா வேலையும் செய்திருக்கிறார்.

கூட இருக்கும் அனைவரும் ஆண்கள் என்ற போதும், மேடம் இல்லாத போதும் ஓடியாடி வேலை செய்திருக்கிறார். பத்தாம் வகுப்பு படித்த ஒரு ஆணுடன் நான் கோல்ட் மெடலிஸ்ட் என்ற ஈகோ எதுவுமில்லாமல் வேலைகளைப் பகிர்ந்து செய்திருக்கிறார். செட்டில் புழுதியோடு, வேர்வையோடு வேலை செய்ய வேண்டும். ஒரு அவசர சமயத்தில் தேவைப்பட்டபோது ப்ரசன்னாவுடைய ஷூவை கூட பாலிஷ் செய்து கொடுத்திருக்கிறார். எனவே இப்படி உழைத்ததனால் படம் ஆரம்பித்து முடிக்கும்போது அந்த யூனிட்டைச் சேர்ந்த அனைவரும் இவரின் உழைப்பில் பிரமித்து இவரையும் மேடம் என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்தப்பட ஆடியோ ரிலீசுக்கு வந்த பிரகாஷ் ராஜ் அடுத்த படம் இவரை செய்ய சொல்லி கேட்ட போது கொஞ்சம் தனியே செய்ய தயக்கமாக இருந்ததால் செய்யவில்லை. பின் நிறைய விளம்பரப் படங்கள் , கார்ப்பரேட் படங்கள் செய்திருக்கிறார். ப்ரொமோட் ஆட் மற்றும் கார்ப்பரேட் ட்ரெயினிங் ஆட் செய்திருக்கிறார். பிரகாஷ் சாரோட படம் பண்ண முடியவில்லை. எனவே பல இடங்களில் இயக்குனராக முயற்சி செய்து பல இடங்களிலும் முட்டி மோதி அவமானம் கூட ஏற்பட்டது. இருந்தாலும் விடா முயற்சியோடு முயன்று ரியல் இமேஜில் சத்யா சிவாவிடம் கதை சொல்லி திருதிரு துறுதுறு படத்துக்கான வாய்ப்பு கிடைத்தது.

முதலில் அவர்களும் 3 . 4 சீன்ஸ் எடுத்துக் காமிங்க. பிடிச்சா செய்யலாம் என சொல்ல மூன்று சீன்கள் ஷூட் செய்து காண்பித்திருக்கிறார். அது பிடித்துப் போகவே ஹீரோவாக அஜ்மலையும் ஹீரோயினாக ரூபா மஞ்சரியையும் வைத்து இயக்கி அந்தப் படம் சக்சஸா வெளிவந்து ஜெயித்தது.

இந்தப் போராட்டத்தில் திருமணமாகி 7 வருடம் ஆகிவிட்டபடியால் எல்லாரும் குழந்தை பெற்றுக்கொள்ளலாமே என சொல்ல இப்போது ஒரு குட்டிப் பெண்ணுக்குத் தாயாய் ஆகி இருக்கிறார். அந்த தெய்வம் தந்த பூவின் பெயர் ரிஷிதா. தற்போது இவர்தான் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார். இனி அடுத்து ஒரு திகில் படத்துக்குத் திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார். அது ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றியது. ஒரு ஆள் இன்வெஸ்டிகேட் செய்கிறார்.

இதன் நடுவில் சில விளம்பரப்படங்களும் செய்து வருகிறார். டிசம்பர் ஜனவரி ஆரம்பத்தில் இதன் ஷுட்டிங் இருக்கும்போது மட்டும் தாயிடம் குழந்தையை விட்டுச் செல்லவேண்டும். கொஞ்சம் அப்போ விடலாமென நினைக்கிறேன் என்றார்.விடாமுயற்சியோடு ஜெயித்த டைரக்டர் நந்தினியின் அடுத்த படமும் வெற்றியடைய வாழ்த்தி வந்தோம்.

 டிஸ்கி:- போராடி ஜெயித்த பெண் ( 15) நந்தினி ஜே எஸ் பற்றிய இந்தக்கட்டுரை நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தது.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

கவிதைக்காரர்கள் வீதியில்..

கோதுதல்..

ஒரு தூக்கம் வரும்போது
ஒரு சோகத்தை விழுங்கும் போது
ஒரு கோபத்திலிருந்து விடுபட
ஒரு துக்கத்தை வெளியேற்ற
தேவையாய் இருக்கிறது
தலை கோதுதல்.

தாத்தாவின் முடியடர்ந்த
மார்பில் படுத்தபடி
கதை கேட்டு உச்சுக்கொட்டி
முகம் பார்த்து மல்லாந்திருக்க
தலை கோதும் அவர் கைக்குள்
சுருண்டு வருகிறது
மந்திரக் கோலால்
தொட்டதுபோல் தூக்கம்.

படிப்பு மந்தமோ.,
திருமண பந்தமோ
பார்வையாலே கோதி
தாத்தா வருடும்போது
ஒரு சமரசம் வருகிறது
ஜெயித்து விடுவோமென.

நல்லெண்ணையும் சீயக்காயும்
தாத்தாவின் தலைப்பக்கம்
தொட்டுவைத்துத் திரும்பும் போது
துக்கம் கோதுகிறது
தொண்டையை.
கேவலாய் வெளிப்பட்டு.

தங்கம் உரசி நாவிலிட்டு
பெயரிட்டு அள்ளிக் கொண்டவர்
திரும்பப்போவதில்லை
எத்தனை முறை கூவினாலும்.
பயணப்பட்டுக் கொண்டிருந்தார்
கேளாச் செவியும் பாராமுகமுமாய்
பச்சை ஓலையில்..

அலமாரி லாக்கரைத்
திறக்கும் போதெல்லாம்
மறைந்த தாத்தா
சந்தனப் பாக்கெட்டுகளோடு
வார்த்தைகளால்
கோதியபடி இருந்தார்
பாதுகாத்து வைத்திருந்த
பழைய கடிதங்களில்..

 டிஸ்கி:- இந்தக் கவிதை 2012 ஜூன் மாத குங்குமத்தில் வெளிவந்தது..

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

என்னது..ட்ரெயின்ல மட்டும் மனுஷங்க வளர்றாங்களா

ட்ரெயின்ல மட்டும் மனுஷங்க வளர்றாங்களா..

ஆமாங்க ஆமாம். இந்த அதிசயத்தை நான் பல ட்ரெயின் பிரயாணங்கள்ல பார்த்து இருக்கேன். வரும்போது நம்ம மாதிரிதான் இருப்பாங்க. ஆனால் தூங்கும்போது ட்ரெயின் நிர்ணயிச்ச சீட் அளவை விட அதிகமா அவங்க கால்கள் நீட்டிக்கிட்டு இருக்கும்.

பொதுவா நடுவில் வர பர்த்துங்கள்லதான் அதிகமா இப்பிடி இருக்கும். சைட் அப்பர்ல சில சமயம் இப்படி இருக்கும். எதுக்கும் எந்திரிக்கும்போது நாம பாத தரிசன க்யூவில நிக்கிறமோன்னு நினைக்கிற அளவுக்கு சில சமயம் இருக்கும்.

பாத்ரூம் போகணும்னு எந்திரிச்சா நாம இவங்க பாதங்கள்ல படாம ( ஒரு மரியாதைதான் காரணம்..!) ஒரு மாதிரி கம்பிங்கள்ல அடிபட்டுக்கிட்டே நெளிஞ்சு வளைஞ்சு பவ்வியமா போகணும். தூக்கத்துல கண் திறந்து பார்த்தாலும் சில சமயம் ஆங்கிலப் படங்கள் மாதிரி அரை இருட்டுல அல்லது மணிரத்னம் பட எஃபக்டுல கொஞ்சம் திகிலா இருக்கும். ”கால்கள்”னு கூட இந்த ட்ரெயின்கள்ல ஒரு த்ரில்லர் படம் எடுக்கலாம்.

இதுக்கெல்லாம் முதல் காரணம் மக்கள் தங்கள் லக்கேஜுங்களையும் தங்கள் தலைமாட்டில போட்டுட்டுப் படுக்குறதுதான். சிலர் வீட்டைப் பூட்டுற மாதிரி பூட்டு, செயின், சாவி எல்லாம் கொண்டு வந்து பூட்டிட்டுப் படுப்பாங்க. அட ஏசியில கூட அப்பிடித்தாங்க.. ஹாங் .. அது அவங்க லக்கேஜு .. காணாம திருடு போயிட்டா நீங்களா கொடுக்கப்போறீங்கன்னு கேக்குறீங்களா.. அதுவும் சரிதான்.

இதுல முக்கிய காரணம் என்னன்னா. எந்த பர்த்ல படுத்தாலும் யாரா இருந்தாலும். கைய கால நீட்டிப் படுத்தா வெளியே வரத்தான் செய்யுங்கிறது உண்மை. இந்த விஷயத்தை தமாஷா ரங்கமணிகிட்ட சொன்னதும் கோபப்பட்டாரு,”நீ என்ன சொல்றே. மீட்டர் கேஜுன்னா பரவாயில்ல. ப்ராட்கேஜு போட்டிருக்கு ரெயில்வே.. இதுதான் மாக்சிமம். இதுக்கு மேல முடியாது இதென்ன வீடா, இருக்க இடத்துல படுத்துக்க வேண்டியதுதான் ”அப்பிடின்னு. அட.. இவர் எப்ப ரயில்வேக்கு மாறினாரு..!!!

பொதுவா அஞ்சடி நாலங்குலம் இருக்க நானே சைட் அப்பர்ல படுத்துகிட்டு கையை நீட்டினா சீட்டுக்கு வெளியே தொங்கும். இதென்ன ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சூட்டான்னு கேக்குறீங்களா.. ஒக்கேங்க. இருந்தாலும் மக்களே நீங்க உங்க லக்கேஜுங்களை எல்லாம் கொஞ்சம் பக்கவாட்டுல வைக்கக் கத்துக்கலாம்.

ப்ரயாணம் பண்றவங்களுக்கு எல்லாம் ரெயில்வே டிக்கட் புக் பண்ணும்போதே சொல்லிடலாம். லக்கேஜுங்களுக்கு சீட்ல இடமில்லைன்னு. அஞ்சடி மனுசங்களுக்கு ஒரு கம்பார்ட்மெண்ட், ஆறடி மனுஷங்களுக்கு ஒரு கம்பார்ட்மெண்டுன்னு. ஒதுக்கலாம்.

கால்களுக்குன்னு சிட்ல ஒரு ஃபோல்டிங் ஸ்டாண்ட் பொருத்தி வைக்கலாம். மத்தவங்க மேலயாவது இடிக்காம இருக்கும்.

முன்ன எல்லாம் பஸ்ல ஒரு கம்பி இருக்கும். அதுல ஒரு அளவு குறிச்சு இருப்பாங்க. அந்த அளவுக்கு மேல இருந்தா முழு டிக்கெட். அதுக்கு குறைவா இருந்தா அரை டிக்கெட். கண்டக்டர் மடியில் உக்கார வைச்சு இருக்க பிள்ளைங்கள எல்லாம் இழுத்து அளவு பார்த்து டிக்கெட் போடுவார். ஆனா பாருங்க எங்க பெரியம்மா அந்த அளவுக்கு மேல வளரல. ஆனாலும் முழு டிக்கெட் வாங்கிகிட்டு இருக்காங்க இத்தன வருஷமா ..



அது மாதிரி ரயில்வேயும். டிக்கெட் போடும்போதே மனுஷங்க அளவையும் அளந்து இப்ப வர்ற ஏசி பஸ்ஸுங்க மாதிரி நல்ல நீளமா. வாட்ட சாட்டமான ஆளுங்களுக்கெல்லாம் தனி கம்பார்ட்மெண்டே ஒதுக்கலாம். ( செகண்ட் ஏசி அப்பிடித்தான் இருக்கும்) ஆனா 4 மடங்குல்லா.. எனவே சாதாரண ஆளுங்களும் போற மாதிரி வேற மாதிரி டிசைன் பண்ணி நல்ல நீள சீட்டா(அகலம் பரவாயில்ல)  போடுங்க ரயில்வேஸ்காரங்களே. கொஞ்சம் அதிகமா காசானாலும் பரவாயில்ல.

போன தரம் ரயில்வே போஸ்ட் போட்டப்ப -- ”தென்னக ரயில்வேயில் ஒரு நாற்றம் பிடித்த பயணம்” -- பலபேர் கொதறித் தள்ளிட்டாங்க. ஏன் நீங்க 900 /-- ரூபாய் கொடுத்து பஸ்ஸுல என்ன வசதிக் கொறச்சல்னானும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறீங்க . ட்ரெயினைச் சொல்ல வந்துட்டீங்கன்னு. .

இப்ப என்ன சொல்வாங்கன்னா கால மொடக்கிக்கிட்டே போவீங்க பஸ்ஸுல. ட்ரெயின்னா மட்டும் உருண்டு பொரண்டு படுக்க எல்லாம் இடம் கேக்குறீங்களான்னு... என்ன செய்யிறது பொது மக்கள் சேவையில் கொடுக்குற மகராசன் கிட்டதானே கேக்க முடியும்.

நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கிறப்பவே ட்ரெயினின் காதலி. எனக்கு பஸ்ஸுன்னாலா அலர்ஜி. பெட்ரோல் புகை கூட.. எனவே பொதுமக்கள் அடுத்தவங்கள படுத்தாம படுத்துக்கணும். அல்லது ரயில்வே பர்த்களோட டிசைனை 3 செட்டா நேரா வைக்கலாம். ட்ரெயின் போற டைரக்‌ஷன்லயே..அப்பத்தான் கால் வளர்ந்த மனுஷங்களைப் பார்த்து பயப்படாம நாம பயணம் செய்யலாம்.


வானவில் ---- சிறுகதை. குங்குமத்தில்..

பாலத்தின் நடுவில் நின்றிருந்தார் அவர். தொலைக்காட்சியில் காண்பித்தபடி உருட்டி புரட்டி சென்று கொண்டிருந்தது வெள்ளம்.

ஹ்ம், அன்பான மனைவி இல்லை, மகள்கள் திருமணமாகி வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்கள். தனக்கு யாருமே இல்லை என நினைக்கும்போது சுய இரக்கத்தில் அவர் கண்களில் கண்ணீர் கசிந்தது. யாருக்காக வாழ வேண்டும். இதில் குதித்துவிட்டால் எல்லாம் மறந்துவிடலாம்.

ர் என்று பக்கத்தில் ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இருவர் பாலத்தைப் பிடித்தபடி எட்டிப் பார்த்தார்கள். அவர் திரும்பியடியே நின்றிருந்தார் கலங்கிய கண்களை மறைத்தபடி.

ஒருவன் மற்றொருவனிடம் சொன்னான், “ டேய் மச்சி என்னா வெள்ளம் பாரு. இப்பிடி வெள்ளம் வந்தா ஸ்கூலுக்கு கட்தான். அந்தக் காலத்துல இந்தப் பாலம் இல்லாதப்ப சின்னப்புள்ளயான நானெல்லாம் தலை மேலே பள்ளிகோட பையை வைச்சிகிட்டு கழுத்தளவு தண்ணீல நனைஞ்சிகிட்டே ஸ்கூல்க்கு போவேண்டா.. அப்புறம் எங்க பாட்டி சொல்லுச்சு ஒரு மவராசன் இந்த பாலத்தைக் கட்டினான்னு. இதுல நடந்து போயிதாண்டா நானு ஸ்கூலு முடிச்சேன். இன்னும் 4 பாலமும் அதோ அந்தால இருக்குதுபாரு ..அந்த மணிக்கூண்டும் கூட அவர் கட்னதுதானாம். அந்தக் காலத்துல எங்க வாட்ச் இதுதான் “ என சொல்லி சிரித்தான்.

நிமிர்ந்து பார்த்தார் அவர். அந்த மணிக்கூண்டின்மேல் தெறித்த சாரலொடு சிறிது வெய்யிலும் அடிக்க ஒரு அழகான வானவில் மணிக்கூண்டிலிருந்து இன்னொரு தொடுவானுக்கு போனது.

ஆமாம். இன்னும் இந்த ஊருக்கு செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கு. தான் வாழ்வதிலும் அர்த்தம் இருக்கு என்று மனநிறைவோடு தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டபடி பாலத்தை விட்டு இறங்கி நடந்தார் பாலமும் மணிக்கூண்டும் கட்டின அந்த மகராசன்.

டிஸ்கி :- இந்தக் கதை 26.11. 2011 குங்குமத்தில் வெளிவந்தது

புதன், 15 ஆகஸ்ட், 2012

வானம் தொட்டுவிடும் தூரம்தான்.. ஸ்ரீலேகா..

ஸ்ரீலேகா.. இவர் சமூக சேவகி., சுதந்திரப் போராட்டத் தியாகி., விஷ்ராந்தி என்ற முதியோர் இல்லத்தின் நிறுவனர் சாவித்ரி வைத்தியின் தங்கை மகள். அம்மா., பெரியம்மா வழியில் இவரும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். ரொம்ப கூச்ச சுபாவமுள்ள குழந்தையாய் இருந்த இவர் இப்போது தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாய் இருக்கிறார். இந்த மாஜிக் நிகழ்ந்தது எப்படி.. எல்லாம் வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடம்தான்.

சென்னையைச் சேர்ந்த இவருக்கு ஒரு தம்பி.தம்பி பிறந்த 20 நாளில் தாய் மறைந்து விட்டார். அப்போது இவருக்கு வயது 5. தந்தை ராமனாதன் எல் ஐ சி யில் இருந்து ஓய்வு பெற்றவர். பெரியம்மாதான் இவரை வளர்த்திருக்கிறார். ரோசரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்ததால் மிக அருமையாக நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுகிறார். பி யூ சி எத்திராஜ்., பி ஏ. ஹிஸ்டரியில் கோல்ட் மெடலிஸ்ட். மெரிட் சர்டிஃபிகேட்., மற்றும் ப்ரொஃபிஷியன்ஸி சர்டிஃபிகேட் பெற்றவர்.

எம் ஏ ஹிஸ்டரி ப்ரசிடென்ஸி கல்லுரியில் படித்தவர். இரண்டாம் வருடம் படிக்கும் போதே திருமணம். அதற்குப் பின்னும் தொடர்ந்து படித்து யூனிவர்சிட்டி ராங்க் மற்றும் அவுட் ஸ்டாண்டிங் க்ரேட் ( for the first rank in the university) வாங்கியுள்ளார். பி ஹெச்டிக்காக civilisation of history of a country பற்றி லைப்ரரியில் நோட்ஸ் எடுத்துப் படித்தாராம்.

ஐஏஎஸ் அல்லது ஐஎஃப் எஸ் படிக்கத்தான் ஆசை அல்லது ஆர்க்கியாலஜியில் ரிசர்ச் செய்யணும்னு ஆசை எனச் சொல்லும் இவர் சிவிலைசேஷன்., கல்வெட்டு பற்றிப் பிடித்ததால் ஹிஸ்டரியைப் படித்ததாக சொல்கிறார். சயின்ஸ் ., மாத்சில் இண்டரஸ்ட் இல்லை. லிட்ரேச்சர் படிக்க ஆசையாக இருந்தாலும் வித்யாசமான ஒன்றைப் படிக்கவேண்டும் என்பதற்காகவே ஹிஸ்டரியை எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

ஒரு பையன் ஒரு பெண் பிறந்தத பின் கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து 19 வருடங்கள் ஆகிவிட்டதாம். அதன் பின் மதர் தெரசா யூனிவர்சிட்டியில் எம் பில் படித்து டிஸ்டிங்க்‌ஷனில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். படிப்பறிவு தனக்கு தன்னம்பிக்கை அதிகரித்ததாகக் கூறுகிறார்.

ஹிஸ்டரியோடு சம்பந்தப்பட்டது விமன் ஸ்டடீஸ்.-- ஃபெமினிஸம். விமன் ஓரியண்டட் பத்தி -- அம்புஜம்மாள் என்ற ரினௌண்ஸ்ட் காங்கிரஸ் சேவகி பத்தி ஒரு வருட தீசிஸ் செய்து சமர்ப்பித்திருக்கிறார். அவரும் இவரின் கொள்ளு அத்தைப் பாட்டியாம். ஸ்ரீனிவாச காந்தி நிலையம் என்பது ஆதரவற்ற பெண்களுக்கு உதவுவது. தன்னைத் தானே பெண்கள் பார்த்துக் கொள்ள உதவுவது. இது அம்புஜம்மாளால் உருவாக்கப்பட்டது.

டைரக்டர் பாலசந்தரின் பெண் புஷ்பா கந்தசாமி இவரின் தோழி என்பதால் அவருடைய கம்பெனியில் ஒரு வருடம் பணிபுரிந்திருக்கிறார். அப்புறம் ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்டில் 6 வருடம். கஸ்டமர் சர்வீஸில் பணி. எல்லாமே செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நல்ல விதமாகக் கொண்டுவந்ததாகக் கூறி்னார். இது நன்கு ஷேப் ஆகும் வரை அதில் இருந்திருக்கிறார்.

இவரது பெரியம்மா சாவித்ரி வைத்தி மற்றும் தம்பி கிருஷ்ணன் இவர்களே தன் தன்னம்பிக்கையின் தூண்டுகோல்கள் என்கிறார். இவரின் தம்பி கிருஷ்ணன் யூ எஸ்., நேபாள், மும்பை ஆகிய இடங்களில் சுற்றுச் சூழல் சம்பந்தமாக GREEN VENTURES என்ற கம்பெனியை நடத்தி வருகிறார். இது பயோ காஸ்., சோலார் எனர்ஜி., விண்ட் எனர்ஜி யை எப்படி உபயோகப்படுத்துவது என கற்பிக்கிறது. இது சம்பந்தமாக ஃபண்ட் உதவி செய்யும் வெளிநாட்டுக் கம்பெனிகளில் இருந்து இந்த கம்பெனிகளுக்கு உதவியை வாங்கி சேவை செய்கிறது. அதை இவர் ட்ரெயினிங் செய்கிறார். கம்பெனி ட்ரெயினராக.

இது எப்படி எல்லாம் கைவந்தது எனக் கேட்டால் கம்யூனிகேஷன் ஸ்கில்., மேனேஜ்மெண்ட் ஸ்கில்ஸ் எல்லாம் கல்லூரியில் 15 வருடங்களாகப் படித்தது மற்றும் லயன்ஸ் க்ளப்., லயனஸ் க்ளப்பில் 25 வருடம் இருந்ததால் ஆங்கிலம் பேச., தொடர்பு கொள்ள உதவியாக இருந்தது என்கிறார். (ரோஸரி மெட்ரிக்கில் படித்ததாலும் மிக அருமையான ஆங்கிலம் இவருடைய பேச்சில் இனிமையாய் இருக்கிறது.). லயனஸ் க்ளப்பில் 3 நாட்கள் ட்ரெயினிங் கொடுத்திருக்கிறார்கள்.

ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் மற்றும் அகாடமி நடத்தும் அளவு இது தன்னம்பிக்கை கொடுத்துள்ளது. தற்போது அஷோக் குமார் மேத்தா ஜெயின்ஸ் க்ரூப் ஆஃப் கம்பெனிகளின் METHA INSTITUTE OF CARRIER TRAINING -- MICT -- EXECUTIVE DIRECTOR ஆக இருப்பதாகக் கூறினார்.மிஸஸ் ராஜலெக்ஷ்மி-- இவர் இதில் ( இவர் ஒரு ஸ்கூல் பிரின்சிபால்) மேனேஜிங் டைரக்டராக இருக்கிறார்.

திருநெல்வேலி., திருச்சி., திருப்பதி., விசாகப்பட்டினம் இங்கே இவர்கள் ஹோப் இண்டர்னேஷல் கல்லூரி நடத்தி வருகிறார்கள்.

இவருடைய தம்பி காத்மாண்டுவில் அழகப்பா யூனிவர்சிட்டியின் தொலைதூரக் கல்வி ஆரம்பித்து 7 வருடங்களாகிறது. அதில் இப்போது நர்சிங் கோர்சஸும் எடுக்கிறார்கள். 400 மாணவர்கள் படிக்கிறார்கள். பி ஏ., எம் ஏ வும் படிக்கிறாங்க. தம்பி மனைவி நிர்ஜலா ஒரு நேபாளியாக இருப்பதால் அதை கவனித்துக் கொள்கிறார். அதில் இவருடைய ஆலோசனைகளும் உண்டு. இவர் டீனாக போர்டில் இருக்கிறார். மிக நல்ல பேரோடு நல்ல முறையில் நர்சிங் காலேஜ் மற்றும் மருத்துவமனை நடக்கிறது.

விமானத்துறை., சுற்றுலாத்துறை., விருந்தோம்பல் ஆகியவற்றுக்கு MICT யில் பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறினார். லீடர்ஷிப் ஒர்க்‌ஷாப்புகளும் நடத்துவதாகக் கூறினார். இவர் ONE OF THE TRUSTEESIN VISHRANTHI .. டொனேஷன்கள் வாங்கித் தருவதாகவும் கூறினார்.

ரொம்பப் பயந்த சுபாவம் கொண்டவர் இவர். ஷை டைப்., 5 வயதில் அம்மா இறந்து விட்டதால் 2 பாட்டியும்தான் வளர்த்திருக்கிறார்கள். எனவே இவரும் தம்பியும் எப்போது படிப்பு படிப்பு என படித்திருக்கிறார்கள். செலவுக்கு அப்பாவிடம் தொந்தரவு செய்வதில்லை. பள்ளிப் பருவத்தில் பஸ்ஸில்தான் செல்வார்கள்.

ஒரு பெண் தனித்து வாழும்போது சுற்றி இருப்பவர்கள் பலதும் பேசுவார்கள். அதுகெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் பயப்படாமல் தன் வேலைகளைச் செய்து கொண்டே போக வேண்டும். கான்ஃபிடண்ட்., வீரம் வேண்டும். என்கிறார். அன்றைய ஸ்ரீலேகாவையும் இன்றைய ஸ்ரீலேகாவையும் நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது ., நம்ம இண்டிபெண்டன்ஸை ., டிட்டர்மினேஷனை நாம காண்பிக்க வேண்டும் என்கிறார். எல்லாவற்றிலும் இருந்து ஓவர்கம் செய்ய வேண்டும் என்கிறார். முற்போக்குத்தன்மையோடு வாழ ஓவ்வொரு பெண்ணும் முயல வேண்டும் என்பதே இவர் தரும் தன்னம்பிக்கைக் செய்தி.

DEDICATED SEVICE WITH VISION -- DSV WITH YOU ALWAYS. என்ற சாய் ஸ்லோகனைச் சொல்லித் தனது பேட்டியை முடித்தார். முடிந்தவரை அனைவரும் சேவையில் ஈடுபடுங்கள்.

 டிஸ்கி:- போராடி ஜெயித்த பெண் ( 14) ஸ்ரீலேகா பற்றிய இந்தக் கட்டுரை அக்டோபர்  2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தது.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா. TAMIL BLOGGER'S MEET

பதிவர் சந்திப்பு பற்றிய இந்த அழைப்பிதழை சகோ மின்னல் வரிகள் கணேஷின் வலைத்தளத்தில் இருந்து பெற்றேன். தமிழ்ப் பதிவர்கள் 5000 பேர் இருப்பதாக சகோ மதுமதி சொன்னார். என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. இயன்ற பதிவர்கள் கலந்து கொண்டு மகிழுங்கள். உங்க ப்லாக் போஸ்ட் பார்த்து நாங்க மகிழ்ச்சி அடைவோம்.:)


எதிர்பாராமல்... ( சமுதாய நண்பனில்..)

எதிர்பாராத மழையோ
ஆளடிக்கும் வெய்யிலோ
ஒதுங்கச் செய்கிறது
அருகாமை வீட்டை..

தெரியாதவர் வீட்டு வாசலில்
ஒதுங்குவது நல்லது.
தெரிந்தவர் வீட்டு
வரவேற்பறையை விட..

ஜூஸோ., காஃபியோ
துண்டோ தரும்
தொல்லையிலிருந்து
அவர்களும்..

ஈரமாகுமோ.,
அழுக்காக்கி விடுவோமோ
என தொற்றி அமரும்
கவலையிலிருந்து
நாமும் விடுபடலாம்.

டிவியை முறைப்பதோ.,
புத்தகம் புரட்டுவதோ
உரையாடுவதோ கூட
கடினமாயிருக்கிறது.

ஓசிக்குடை கேட்போமோ
என்று அவர்களும்
கேட்க வேண்டி வருமோ
எனத் தயங்கி நாமும்
சம்பந்தமில்லாத ஊர்க்கதையில்.

ஓரளவு நின்ற மழையோ
மூட்டமிடும் வெய்யிலோ
இன்பமளிக்கிறது
இருவரையும் அவஸ்தையில்
இருந்து விடுவித்து..

டிஸ்கி:- இந்தக் கவிதை செப்டம்பர் 2011  சமுதாய நண்பனில் வெளியானது. 

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

தோழிகளால் வளர்ந்தவன். ( சமுதாய நண்பனில்)

இளவேனிற் காலத்தின்
வளர் சிதை மாற்றங்களில்
இலைகளாய் துளிர்க்கும்
பிறப்பின் முதல் தோழியிடம்
அழுதபடியே வந்தேன்.
அணைத்து உச்சி மோர்ந்தாள்.

பால்யத்தில் மொக்குவிட்ட
பள்ளித்தோழியிடம்
பலதும் சொல்லி சீண்டுவேன்
பதிலாய்ச் சிரித்துக்
கற்பி்த்தாள் பொறுமையை.

பூத்துவிட்ட பின்னாலே
கல்லூரி பாவையவள்
கைபிடித்து சுற்றினாள்
தட்டாமாலையாய்..
உலகமெல்லாம் என்
உள்ளங்கையில் குவித்து..

திருமண மாலையாகி
சீராக்க வந்தாள்
என் மீதியான துணைவி
சேர்ந்தலைந்தோம்
துன்பம் போன்ற இன்பத்திலும்..

புதுசான மொக்காய்
பொக்கைவாய்சிரிப்பில்
பூங்கொத்தாய் விரிந்தாள்
எனை ஆளவந்த தேவதை..
மீண்டும் துளிரானேன்
அவளோடு வளர..

 டிஸ்கி:- இந்தக் கவிதை செப்டம்பர் 2011 சமுதாய நண்பனில் வெளிவந்தது.
 

கபினியின் கருணையில் ஆவணி 18..?

இந்த வருடம் போல எந்த வருடமும் குழாயடியில் ஆடி பதினெட்டைக் கொண்டாடி இருக்க மாட்டார்கள் மக்கள். அகண்ட காவிரி மணலால் வரண்ட காவிரியாகக் கண்ணைக் கசியச் செய்தது நிஜம். எப்படியும் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நீரோ, மழையோ வரவேயில்லை.

நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம். நதியே இல்லாமல் பிழைப்பவர்களும் இப்போது நாம்தான். கோயில் இருக்கும் இடமெல்லாம் பார்த்தால் ஒரு ஊரணி, குளம், ஆறு, கடல் ஏதாவது இருக்கும். ஸ்தல புஷ்கரணி என்று. இப்போது எல்லாம் காய்ந்து கிடக்கிறது. வரண்ட வாய்க்கால்களையும், கால்வாய்களையும் பாலீதீன் குப்பைகளோடு பஸ்ஸில் அல்லது ட்ரெயினில் பார்த்தபடி கடக்கிறோம்.

“வைகை நதி பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர..”இதெல்லாம் பாடல்களில் மட்டுமே கேட்கக் கூடியதாக இருக்கு. ஆடி மாதம் அம்மன் திருவிழாக்காலம். தெப்பக்குளத்துக்குள்ளே எல்லாம் மோட்டார் போட்டு தண்ணீரால் ஒரு வாரமாக நிரப்பி இருக்கின்றார்கள். திருச்சியில் மாநகராட்சியே மக்களுக்காக ஆற்றில் பைப் லைன் போட்டு போர் இறக்கி ஆடி பதினெட்டில் மக்களுக்கு நீராட வசதி செய்திருக்கிறது. நகரத்து மக்கள்தான் பைப்புக்கு பூஜை செய்யும் துர்ப்பாக்கியசாலிகள் என நினைத்திருந்தேன். இது ஆற்றிலேயே நடக்கிறது.

கபினியில் இப்போதுதான் நீர் நிரம்பிக் கொண்டிருக்கிறது. அது உபரியானதால் மேட்டூர் அணை நிரம்பிக் கொண்டிருகிறது.. அது நிரம்பித் ததும்பினால் காவிரியில் தண்ணீர் வரும். அது ஆவணி 18 ஆக இருக்கலாம். தென்மேற்குப் பருவ மழையும் சரிவரப் பெய்யவில்லை. சம்பா பயிர் சாகுபடி தள்ளிப் போகிறது. குறுவை சாகுபடி செய்தவர்கள் வடகிழக்குப் பருவ மழையை எதிர் நோக்கி இருக்கிறார்கள். இது பெய்யும் அல்லது பெய்யாமல் கிடக்கும். இதனால் தரிசு நிலங்கள் பெருகி வருகின்றன.

வேகாத வெய்யிலில் ஆற்றில் சலவைத் தொழிலாளிகள் இரண்டு ஊத்து வெட்டி ஒன்றில் துவைத்து இன்னொன்றில் அலசுவதைப் பார்த்தேன். என்ன கொடுமைடா சாமி. விலங்குகளுக்குக் கூடக் குடிக்கத் தண்ணீரில்லாமல்.

அதே நாள் உத்தரகண்டில் கனமழை. வெள்ளம். 3 மாடிக் கட்டிடத்தையே உருட்டியது வெள்ளம். 34 பேரை பலி கொண்டது. ஒரிஸ்ஸாவில் மகா நதியில் வெள்ளம். ஹிராகுட் அணையின் 19 மதகுகளும் திறந்து விடப்பட்டிருக்கின்றன. அங்கே பெய்து கெடுத்து இங்கே பெய்யாமல் கெடுக்கிறது.

வருடா வருடம் அஸ்ஸாமில் வெள்ளம். ஆந்திராவில் வெள்ளம் எனக் கேள்வியுறுவோம். இங்கே தமிழ்நாட்டில் தஞ்சைத் தரணியில் விவசாயிகள் தண்ணீரில்லாமல் , விவசாயமில்லாமல் எலிகளைத் தின்ன கதைகளையும் தற்கொலை செய்து கொண்ட கதைகளையும் படித்து கண்ணீர் விட்டுவிட்டு அப்போதே மறப்போம்.

தேசிய நெடுஞ்சாலைகளைப் போல தேசிய நதிகளையும் இணைப்பதில் என்ன சிரமம் ஏற்பட்டுள்ளது.? ரயில்வே , நெடுஞ்சாலைகள் எல்லாம் தேசியமயமாக்கப்பட்டிருக்கின்றன. நதிகளும் அப்படித்தான். தேசிய நதி நீர் ஆணையம் இடும் ஆணைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டியது ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் அரசின் கடமையாகும். மழை நீர் சேகரிப்பை முறைப்படுத்தியதன் மூலம் ஓரளவு சென்ற வருடங்களில் மாநகரங்களில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடவில்லை.

 வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை முறையாகப் பகிர்ந்து கொடுக்கும் மனப்பான்மை வந்திருந்தால் எங்கும் வெள்ளமும் படுத்தாது. வறட்சியும் படுத்தாது. சின்னச் சின்னக் கால்வாய்களாக வெட்டி நதி நீரை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு வருவதில் என்ன தடை இருக்க முடியும். ?

நதிகளைத் தாயாக்கி வணங்கும் தேசம் இது. கங்கா மாவுக்கு ஆரத்தி என்று பெண்கள் பூஜை செய்து ஆரத்தி எடுத்து வணங்குவார்கள். இலைகளில் தீபங்களை மிதக்கச் செய்வார்கள். அலஹாபாத் சென்றால் கங்கை , யமுனை , சரஸ்வதிக்கு பூஜை செய்யுங்கள் என்று பண்டிட் செய்யச் சொல்லுவார்.

ஆடி பதினெட்டில் என் சிறுவயதில் மன்னார்குடி பாமினி ஆற்றில் நுங்கும் நுரையுமாக வந்த புது வெள்ளத்தில் குளித்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. குளித்தபின் கரையோரமாக ஒரு வீடு போல மணலில் கட்டி அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து அம்மனை மண்ணில் பிடித்து ( தெளிவான ஞாபகம் இல்லை) . அதற்கு மஞ்சள் குங்குமம், புஷ்பம் வைத்து, காதோலை, கருகமணி, கண்ணாடி வளையல்கள் சமர்ப்பித்து. ஊதுபத்தி காட்டி , வணங்கி , கொண்டுபோன கட்டுசாதத்தை சாப்பிட்டு ஆடித்திரிந்து வந்திருக்கிறோம்.

மணியனின் ஒரு கதையில் வரும் சியாமளாவும் பாபுவும் காவிரிக் கரையின் வாசத்தோடு மனதில் பதிந்திருக்கிறார்கள். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் வரும் அம்மா மண்டபத்தை மறக்க முடியுமா.. தி ஜா ரா, லா ச ராவின் கதைகளில் வரும் காவிரி மண்ணின் வாசம் சுமந்த காற்றையும், வசவையும் கூட. சிவகுமாரும் கவிதாவும் நடித்த ஒரு படத்தின் பெயர்.,”புது வெள்ளம்”.

ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் என்று கோட்டையூர் அருகே இருக்கும் கொத்தங்குடிக்குச் சென்று நீராடி வந்திருக்கிறோம். இப்போதெல்லாம் வாட்டர் தீம் பார்க்குகளில்தான் பிள்ளைகள் நீராடுகிறார்கள். குளம், ஆறு, ஓடை, அருவி, வாய்க்கால், கால்வாய், குட்டை, மதகு, அணை, முகத்துவாரம் ஏன் கடலைக் கூட நாம் ஆவணப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

வறட்சியாலா, வெள்ளத்தாலா, தாது வருடப் பஞ்சம் எதால் நிகழப் போகிறது எனத் தெரியவில்லை. அதற்கு முன் நதி நீரைத் தேசியமயமாக்கிய திட்டத்தின் படி கிடைக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிட்டால் மனிதர்கள் என்றொரு இனம் இருந்தது எனவும் ஆவணப்படுத்தப் பட வேண்டி வரலாம்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

என் கைரேகை படிந்த கல்.. எனது பார்வையில்..

என் கைரேகை படிந்த கல்.

தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இது. யாழி என்ற கிரிதரனின் எழுத்துக்களைப் படித்து வியப்படைந்து போனேன். மிகச் சில வரிகளில் பெரும் அர்த்தங்கள் செறிந்து மிக அருமையாய் இருந்தது. நல்ல நூல்களை அடையாள படுத்திய தகிதாவுக்கும் நன்றிகள். விலை ரூபாய் 50.

விகடன்., கல்கி., வாரமலர்., புதிய ழ , வடக்குவாசல் போன்றவற்றில் வெளிவந்துள்ளன இக்கவிதைகள்.

மிக அதிகமாக சின்னஞ்சிறு கவிதைகளில் என்னை ஈர்த்த நூல் இது எனலாம். எல்லா இடங்களிலும் குரைப்பொலிகளோடு இருப்பவற்றோடான சமரசம் செய்துகொள்வதில் தொடங்கும் ஆச்சர்யம் நூல் முழுமைக்கும் வியாபித்தது. கலைக்கப்படாத வீடு சிந்தனையைத் தூண்டியது. எதற்கு சம்பாதிக்கிறோம் என.

சிபாரிசு என்னை மிகவும் கவர்ந்தது அதன் எளிமையான அர்த்தத்தால். எவனோ தொரட்டி பிடித்து என் வாய்ப்பைப் பறித்டுச் செல்வது போல உணர்ந்தேன். தீண்டாமை பற்றிய தீவிரமான கவிதைகள் சிலவும் உண்டு. வர்ணமும்., சந்தர்ப்பவாதமும்., பஞ்சபூதங்களும் சில.

வர்ணங்களுக்காக
தன் வக்கிரச் சுவடுகளைப்
பதிய வைத்தபடி
எரிகின்றது வேள்வித்தீ.

கருப்புக் காய்கள் இரண்டாம் நகர்த்தலுக்கே தள்ளிவைக்கபடுதலும.. இன்னுமா இதெல்லாம் என வருந்த வைக்கிறது. அதே சமயம் திணிப்பை எதிர்த்துக் கடிக்கும் செருப்புக் கவிதை பலே.

காக்கையி்ன் கூட்டை சங்கீதக்குயில்கள் பயன்படுத்துவது பற்றி நல்ல சாடல். என்றும் வலியோன் ., தந்திரமிக்கவன் அடுத்தவனை ஏய்த்துப் பிழைப்பதான உருவம் கிடைக்கிறது இக்கவிதையில்.

கடவுளையே சாத்தானாக்குவது கவிஞனுக்கு வசப்படுமோ.. உண்மைதான். தோற்ற சாத்தானுக்கு பதிலாக கடவுளோடு சமரிட்டால் கடவுளே சாத்தானாகிறார். ஆண்டானே சூதுக்கு வசப்படுதல் இருக்கலாம். ரகசியங்களை வெளியிடும் நண்பர்களின் துரோகம்வலித்தது.

பலிகளுக்குப் பின் தாமதமாய் வரும் சமாதானம் வெண்புறாக்களாய் உருவகப்படுத்தப்பட்ட விதம்.. வதம்.

“அவன் இவன்” அடிக்கடி நினைவோட்டத்தில் சிக்கி என் மனரேகை படிந்த கவிதை..

அவனைப்பற்றிய
அபிப்ராய பேதங்களை
அடுக்கத் தொடங்கினேன்
இவனிடம்.
சற்றும்
எதிர்பார்க்காத
படி
இவன்
அவனாயிருந்தான்.

என எண்ணவோட்டத்தின் மாற்றத்தை படம் பிடித்தது துல்லியம். யுத்தத்தில் ஒற்றைச் சொல்லைக் கேடயமாக்கவா ., வாளாக்கவா.. என கவிதைகள் பல முன்னிருப்பவரிடம் கேட்பது போலும் நடந்தது பகிர்வது போலும் உள்ளன.

ஏழையின்., அந்தகனின்., பிச்சைகாரனின். ரோட்டோர ஓவியனின் காதுகள் அலுமினியத்தட்டில் விழும் காசுச் சத்தத்துக்காக பசித்திருப்பதுமான கவிதைகள் தவிக்க வைத்தன..

குளத்தில் கல்லெறிந்து உடைந்த நிலாவும். பானைச் சில்லாய் கிணற்றுள் பயணப்படுவதும்., ரேணுகையின் உலோகக்குடமும்., நாய்க்கு உணவள்ளி வைக்கும் பிச்சைக்காரியும்., அழகு.

பருவமும்., ஒப்பனையும் பொறிக்கும் வாய்ப்பற்ற முட்டையுடைய பறவை விட்டுச் சென்ற இறகும் ., அற்றகுளமும். சாதிகளால் ஆன தேசமும் சிற்றிலும் கொஞ்சம் அதிர வைத்த கவிதைகள். தாகம் என்னுடைய தாகத்துக்காக நான் சேமிப்பதை அடுத்தவர் எடுத்துச் செல்வதும் ., நான் நானாக இருப்பதும் ., காதல் ஏக்கமும்., கசிய வைத்தது.

தூக்கத்தின் வண்ணம்
நிறம் இழக்கிறது
ஒரு திரியின் நுனியில்
கழுவேற்றப்படுகிறது
இருள்..

இருளைக் கழுவேற்றும் இந்தக் கவிதை ரொம்ப வித்யாசம். யாழியின் கைரேகை படிந்த கற்களை என் கைகளில் வைத்திருந்த கொஞ்ச நேரத்தில் என் கையிலும் ரேகைகளைப் படிய வைத்த கற்கள் இவை.. கவிதைகள் இவை..

டாக்டர் அப்துல்கலாம் வடக்கு வாசலில் குறிப்பிட்ட இவர் கவிதையை முடிவில் குறிப்பிடுகிறேன்.

நேற்றைத் தாங்கிய
குறிப்புகளில்
இன்று
எழுதிய பின்னும்
தெரி்யாத நாளைக்கே
மிச்சமாய்
நிறைய பக்கங்கள்..

தொடரட்டும் .. அந்தப் பக்கங்களிலும் உங்கள் கைரேகை படிந்த கவிதைகள்.. வாழ்த்துக்கள் யாழி. அருமையான தொகுதியைக் கொடுத்தமைக்கு.. தகிதாவுக்கும் மணிவண்ணனுக்கும் கூட..


டிஸ்கி:- இந்த விமர்சனம் 16 ஜூலை 2011 திண்ணையில் வெளியானது.


வியாழன், 9 ஆகஸ்ட், 2012

பெண்ணாதிக்கம்..

கருவறைக்குள்
முடங்கிக் கிடந்த
கோபமோ என்னவோ.,
கர்ப்பக்கிரகத்துள்
அடக்கிப் போட்டாய்..
சில நூற்றாண்டுகளுக்கு முன்
நிலவறையிலும்..

தீட்டென்றும்
கற்பென்றும்
கண் அறியா
வேலியிட்டாய்..
தப்புவித்துக் கொண்டே
இருக்கிறேன்..
வேலிகளுக்குள்
சிக்கித் தவிக்கும்
உன்னையும்..

கண்நிறைந்த அழகோடு
கைநிறைய சம்பாதிக்கிறேன்..
எனக்குமுண்டு
தனித்த சிந்தனைகளும்
விழைவுகளும் இச்சைகளும்..
கர்ப்பப்பையும்
நான்தான் சுமக்கிறேன்
உன்னிடம் ஒப்புவிக்காமல்..

இரட்டைக் குதிரை
சவாரி செய்தும்
சேவை செய்கிறேன்..
அதில் பாதி நீ
செய்யுமுன்னே
பெண்ணாதிக்கம்
என்கிறாயே..

டிஸ்கி :- இந்தக் கவிதை 10, ஜூலை 2011 திண்ணையில் வெளியானது. 

புதன், 8 ஆகஸ்ட், 2012

ராணி..

சேணம் பிடித்து
பாயும் குதிரையின்
பிடறி சிலிர்க்க
தோல் பட்டியில்
கால் மாட்டி
எவ்வுகிறேன்..,
முன்பின்னாக ஆடும்
மரபொம்மைக் குதிரையில்
கூட இல்லை..

திருவிழா .,
தேரோட்டம்.,
புரவி எடுப்பு..
அணிவகுப்பு முடித்து
அமைதியாய் உறைந்து
அசைவு மறந்த
ஐயனார் கோயில்
மண் குதிரையில்
ஆசையோடு அமர்ந்து..

 டிஸ்கி:- இந்தக் கவிதை 10, ஜூலை, 2011 திண்ணையில் வெளியானது.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

பிம்பத்தின் மீதான ரசனை.

இணைந்திருந்த போதும்
ஒரு தனிமையின் துயரத்தைத்
தருவதாய் இருந்தது அது.

புன்னகை முகம் காட்டி
ஒரு பெண் திரும்பிச் செல்லும்போது
அவள் பின் உடலை
ரசிக்கத் துவங்குகிறாய்.

எதிர்பாராமல் லௌட் ஸ்பீக்கரில்
அலறும் பாடலைப் போல
நாராசமாயிருக்கிறது அது.

இல்லாத பியானோவின்
சோகக்கட்டைகளை
அமுக்கவேண்டும் என்ற
எண்ணம் எழுகிறது என்னுள்.

உன்னைப் பொறுத்தவரை
அது ஒரு பிம்பத்தின் மீதான ரசனை
என்னைப் பொறுத்தவரை
அது அடுத்த உடலின் மீதான காமம்.

ஒரு வேட்டையை பிடித்த
திருப்தியுடன் உன் கண்கள்
என்மேல் மீளும்போது
ஏதோ வேலையாய் விலகிச்செல்கிறேன்.

எங்கோ பதிந்த உன் பார்வை
என் மேல் பதியமிடுவது
பிடிக்காமல்  எதிர்ப்புணர்வோடு.

அந்தந்தத் தருணங்களில்
வாழ்ந்திருக்கும் நீ
அடுத்த கோப்பையை நிரப்பியபடி
தொலைக்காட்சியில் மூழ்குகிறாய்.

மூழ்கமுடியாத நான்
பாத்திரங்களோடு என்
போராட்டத்தைத் தொடருகிறேன்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 3, ஜூலை 2011 திண்ணையில் வெளியானது. 


திங்கள், 6 ஆகஸ்ட், 2012

சூலும் சூலமும்

சூலும் சூலமும்..:-
*****************
அவளது அழுகையாலும் புலம்பலாலும்
நிறைந்திருந்தது அந்த வீடு.
தொட்டித் தண்ணீர் கசிந்து
ஊறிக்கிடக்கும் புல்தரையாய்
மொதும்பி இருந்தது அவளது தலையணை.
சமையல் மேடையின் தாளிதத்தெறிப்புக்களாய்
தரையெங்கும் சிதறிப் பொறிந்து கிடந்தன
அவளது கண்ணீர்ப் பூக்களின் உப்பு இதழ்கள்.
உலாவரும் கண்ணீர்க் கதிர்களோடு
தன் சவத்தைத் தானே சுற்றியபடி இருந்தாள் அவள்.
ஓசையற்று ஒலித்துக்கொண்டே
இருந்தன அவளது ஓலங்கள் கேட்பவரற்று.
தனது பிலாக்கணத்தைத் தானே பாடிக்கொண்டு
முடையத் தொடங்கி விடுவாள்
அவ்வப்போது பச்சை ஓலைக் கீற்றுக்களை.
சிவப்புப் பட்டால் போர்த்திக் கிடக்கும்
தனது ப்ரேதம் செல்லும் வழியில்
சிவப்பு மாத்து விரித்துப் பார்த்துக் கொள்வாள்.
யாருக்குமே கேட்காமல் அவள்
அழுது முடிக்கும்போதெல்லாம்
ஒரு சூலம் முளைக்கும் அவளது ஞானக்கண்ணாய்.
எடுத்து வயிற்றிலே செருகிக் கொள்வாள்
ஏன் சூலுற்றீர்கள் எனப் பெற்றவரை நினைத்து.
ஏன் சூலுறவைத்தாய் எனக்கொண்டவனை நினைத்து.
என் சூலில் ஏன் பிறந்தீர்கள் என
சூல் கொண்டவர்களை நினைத்து.
வயிற்றுப் புண் வேக்காளமாகி
நெஞ்சையும் வாயையும் தாக்கும்வரை
சூலத்தால் குத்தியே மீளாத நரகினில்
தன்னையே தள்ளிடுவாள்.
குத்திய சூலத்தின் ரத்தத்தில்
எலுமிச்சையை மாட்டி நிலை நிறுத்தியபின்
தொடர்வாள் தன் கடமைகளை ..
கருவறைக்குள் சக்தி பீடமாய் நிலைநிறுத்தப்பட்டு
திருவிழாவின் ஒரு நாளில் மட்டும் தேரோடும்
அவளுக்குப் புரிகிறது சக்தியின் பேரெழில் சக்தியை
ஒருநாள்கூட யாராலும் தாங்கமுடிவதில்லை என்று.


அம்முவும் புஜ்ஜியும்..:_ குமுதத்தில்

அம்மு நனைந்து கிடந்தாள்.,
வாயெல்லாம் பிஸ்கட் கூழ்., தண்ணீர்.
“அம்மா புஜ்ஜி என் தலையிலே
பென்சில் சொருவி வைச்சிருக்கா.. வலிக்குது”
பென்சில் எடுத்து., வாய் துடைத்து
சமாதானம் சொன்னேன்.,
 “அக்காதானே .. விடு..”
மகள் பள்ளி சென்றபின்
கண் கசக்கி புகார் சொன்ன
பார்பி பொம்மையை அணைத்தபடி..

 டிஸ்கி:- இந்தக் கவிதை நவம்பர் 14, 2011 குமுதத்தில் வெளிவந்தது.


ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பண்புடன் குழுமத்தின் போட்டிகள்.

பண்புடன் மின்னஞ்சல் குழுமத்தின் ஆண்டு விழா போட்டிகள்...
 ------------------------------ ----------------------------------------------

கவிதைப் போட்டி தலைப்பு : "வீடு"

கட்டுரைப் போட்டி தலைப்பு : "இன்னுமா இருக்கிறது காதல்"

கதை : எந்த தலைப்பில் வேண்டுமானாலும் எழுதலாம்

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : panbudan.padaippugal@gmail.com

புகைப்பட போட்டி கரு: "நீர்"

புகைப்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.padaippugal.contest@picasaweb.com 

கடைசித் தேதி: ஆகஸ்ட் 31 இரவு: 11:59:59

ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று படைப்புகளுக்கு பரிசுகள் உண்டு....

டிஸ்கி:- முகநூல் நண்பர் ஸ்டாலின் ஃபெலிக்ஸ் இந்த விபரத்தை என்னுடைய முகநூல்  சுவற்றில் பகிர்ந்து இருந்தார். எனவே மக்காஸ்.. பண்புடன் குழுமத்துக்குப் படைப்புகளை அனுப்புங்க. பரிசு பெறுங்க..:) வாழ்த்துக்கள்.


சனி, 4 ஆகஸ்ட், 2012

இந்தியா ரீடிஃபைண்ட்.. மணவாளனின் பணிகள்.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் திருவஹிந்திபுரத்தில் உள்ள கே. என் பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மணவாளன். எட்டாம் வகுப்பில் உடல் நலக் குறைவினால் பள்ளி செல்ல இயலாமல் நிறுத்தியவர். அதன் பின் இரு வருடங்கள் கழித்து தானே உழைத்துச் சம்பாதித்து கடலூர் பெரியார் ஆர்ட்ஸ் காலேஜில் பி. எஸ்ஸி படித்தார்.

சின்ன வயதில் நிறைய சிரமங்களை சந்தித்ததால் கல்லூரியில் படிக்கும் போது யாரையும் தொந்தரவு செய்யாமல் தானே கைத்தறி நெசவு செய்து கடலூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஜெனரல் ஸ்டோர்சில் கொடுத்து அதற்காகக் கிடைத்த தொகையில் தன் படிப்பைத் தொடர்ந்தார். தமிழ் ஆங்கில தட்டெழுத்தும் சுருக்கெழுத்தும் படித்திருக்கிறார். அதே சமயம் ஹிந்தியில் ராஷ்ட்ரபாஷா வகுப்பும் தேறி இருக்கிறார். .

எம் ஏ. பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் மெட்ராஸ் யூனிசர்சிட்டியில் படித்தார். அதன் பின் திருப்பாலையூரில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார்.

சென்னை என் ஐ ஹெச் ஆர் டி யில் பி ஜி டிப்ளமாவும் ( ஹெச் ஆர் டி ), பாண்டிச்சேரியில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் & சிஸ்டம் அனலிஸ்ட் ஆகிய போஸ்ட் கிராஜுவேஷன் செய்துள்ளார். தற்போது அஹமதாபாத்தில் வசித்து வரும் அவர் அஹமதாபாத்துக்கு வந்ததும் குஜராத் யூனிவர்சிட்டியில் எல் எல் பி படித்தார். படிப்பு மட்டுமல்ல. அவர் பல நிறுவனங்களில் பணியும் புரிந்துள்ளார்.

கீர்த்தி என். ராவல் இடம் ( சாலிசிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியாவாக இருந்தவர்). ஒரு வருடம் ஸ்டெனோவாகப் பணிபுரிந்துள்ளார். காடில்லா பார்மசூடிக்கல்ஸில் ( அஹமதாபாத்) ஃபைனான்சியல் கண்ட்ரோலராக ஒரு வருடம் பணிபுரிந்திருக்கிறார்.

மாடர்ன் ஃபுட் இண்டஸ்ட்ரீசில் ( மார்டன் ப்ரெட் தயாரிக்கும் நிறுவனம்), ஜெனரல் மேனேஜரின் பி ஏ வாக ஆறு வருடங்கள் அதன் ( பர்சனல் & அட்மினிஸ்ட்ரேஷன்) நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு பணிபுரிந்துள்ளார். ஹிந்துஸ்தான் பாக்கேஜிங் கம்பெனி லிமிடெடில் ( ஆனந்த் குஜராத்) சூப்பரிண்டெண்டாக 4 வருடங்கள் பணிபுரிந்துள்ளார்.

1995 - 1999. 2000 ஆம் ஆண்டு அட்வகேட்டாக குஜராத் ஹைகோர்ட்டில் பதிவு செய்து ப்ரைவேட் ப்ராக்டீஸ் செய்துள்ளார். நர்மதா நீரை குஜராத்துக்கு சப்ளை செய்யும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில்( காந்திநகர் குஜராத்) ஹெச் ஆர் டியில் 2004 இல் இருந்து 2007 வரை பணிபுரிந்துள்ளார். சீமா( ட்யூப்லைட்டுகள் ) எலக்ட்ரிக்கல் லைட்டிங் ப்ராடக்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் ( லிம்பாசி - குஜராத்) சீனியர் ஆஃபீசராக 9 மாதங்கள் பணிபுரிந்துள்ளார்.

தற்போது திரும்பவும் வக்கீலாக பணிபுரியத் தொடங்கி உள்ளார். பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட இவர் அக்கிரமம் கண்ட போதெல்ல்லாம் பொங்கி எழுந்ததால் எந்த உத்யோகத்திலும் நிலையாக இயங்க முடியாமல் போயிற்று. மனசாட்சிக்கும் பொதுமக்கள் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர் சந்தித்த இன்னல்கள் அநேகம். ஒவ்வொரு வேலையையும் துறந்தாலும் இடைவிடாமல் பொதுமக்களுக்கு அவர் செய்து வரும் சேவையும் அளப்பரியது.

இந்தியா ரிடிஃபைண்ட். ( INDIA REDIFINED ) என்ற அமைப்பின் குஜராத் மாநிலத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய இவர் பின் அதன் அனைந்திந்திய ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். இந்த அமைப்பு யூனிசெஃப்புடன் இணைந்து பணியாற்றுகிறது. குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறை உள்ள அமைப்பு இது. குஜராத்தில் தமிழ் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் லிஃப்கோ டிக்‌ஷ்னரி ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

முதிய குடிமக்களுக்கான உதவியும் , கடலூரில் தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 100 உல்லன் கம்பளிகளும் இந்த அமைப்பின் மூலம் கொடுத்துள்ளார்கள்.

குஜராத் தமிழ் சங்கத்திலும் இணைந்திருக்கும் இவர் பள்ளிக் குழந்தைகளுக்கான படிப்பில் உதவி பெருமளவில் உதவி வருகிறார். இந்தியா ரீடிஃபைண்ட் மூலம் குழந்தைகளைக்கொண்டு விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப் பட்டிருக்கின்றன. மற்றும் பெண் சிசுக் கொலைத் தடுப்பு, குழந்தைத் தொழிலாளிகள் ஒழிப்பு ஆகியவற்றுக்காக இந்த அமைப்பு போராடி வருகிறது.

இவர் வாழ்க்கையில் எந்தப் பின்னடைவு வந்தாலும் சோர்ந்து விடாதவர் என்பதை இவர் தன் திருமண சமயத்தில் நடந்ததைப் பகிர்ந்ததில் புரிந்தது. இவர் திருமணத்துக்காக அஹமதாபாத்தில் இருந்து சென்னை வரும் நாளில் 1991 இல் ராஜிவ் காந்தி அசாசினேஷன் நிகழ்ந்ததால் ட்ரெயின்கள் எல்லாம் ரத்தாகி விட்டன. அடித்துப் பிடித்து கிடைத்ததில் ஏறி வந்தால் இங்கே கடலூரில் திருமணத்துக்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. உடனே விலை அதிகமானாலும் பரவாயில்லை என்று பெரிய கடைகளில் பொருட்களை வாங்கி சுத்தம் செய்து மேலும் போட்டோ வீடியோ போன்றவற்றையும் ஏற்பாடு செய்து ( A to Z) முடித்தால் திருமண நாளான ஜூன் 3 ஆம் தேதியன்று கடும் மழை.. இருந்தும் உறவினர்கள் திருமணத்துக்கு வந்து ஆசீர்வதிக்க சிறப்பாக நடைபெற்றதாம் திருமணம்.

இதுபோல வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சோர்ந்து விடாமல் செயலாற்றுவதால் தனக்குப் பின்னடைவு ஏற்பட்டதாக ஒருபோதும் கருதுவதில்லை. எல்லாத்தடைகளையும் மீறி ஜெயிப்போம் என எப்போதும் நம்பி வந்ததாக சொல்கிறார். என்றும் இதேபோல் எல்லா மக்களுக்கும் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கும் தொண்டாற்றும் இவர் மக்கள் சேவையில் ஜெயிக்கட்டும். என நாமும் வாழ்த்துவோம்.


வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

மேலதிகாரிகள்..

உறங்கத் தாமதமாகும்
ஒவ்வொரு இரவும்
சுமந்து வருகிறது
உழைப்பின் களைப்பை..

அலுவலகம் உறிஞ்சிச்
சுவைத்த நேரத்தை
பார்களில் அமர்ந்து
பீராக உறிஞ்சியபடி

அதிக வேலை பற்றியும்
அதிகப்படியாயோ
குறைந்தோ கிடைத்த
போனஸ் பற்றியும்

கடுகடுத்த மேலதிகாரியை
கிண்டலடித்தபடியும்
சக ஊழியனை
ஜால்ராக்காரனாகவும்

ஐஸ்துண்டங்கள்
கரைய கரைய
மனதைக் கரைத்தபடி
வண்டியில் ஏறும்போது

தூக்கமற்று முறைக்கும்
மனைவி முகம் எதிர்கொள்ள
கரைந்த கவலையெல்லாம்
திரும்ப வயிற்றைக் கலக்கியபடி.

 டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூன் 25,2011 திண்ணையில் வெளியானது.


வியாழன், 2 ஆகஸ்ட், 2012

வெண்கலம் பெற்றுத்தந்த ககன் நரங்..

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுப்பது என்பதே மிகக் கடினமான விஷயம். எல்லாப் போட்டிகளையும் உற்று நோக்கினால் ஒரு சில விநாடிகள் அல்லது ஒரு சில மில்லிமீட்டர்கள்தான் வித்யாசம்தான் இருக்கும் தங்கக் கோப்பைக்கும் வெள்ளிக் கோப்பைக்கும் வெண்கலக் கோப்பைக்கும். அந்த வகையில் லண்டனில் நடைபெற்ற 2012 க்கான ஒலிம்பிக்ஸில் நமது நாட்டுக்காக விளையாடி துப்பாக்கி சுடும் போட்டியில் (AIR RIFLE COMPETITION) முதல் பதக்கத்தை வாங்கித்தந்த ககன் நரங்குக்கு வாழ்த்துக்கள். மிகக் கடுமையாக விளையாடி அவர் பெற்றுத்தந்த வெண்கலமும் தங்கம்தான்.

சின்னப் பிள்ளையில் விளையாட்டாய் துப்பாக்கி சுடப் பழகியவர் இவர். ( நாம கூட மெரினா போனால் வேட்டையாடப் போகும் ரேஞ்சில் துப்பாக்கியைத் தோளில் மாட்டி பலூன்களை டொப் டொப் என்று சுட்டு சந்தோசப்படுவது வழக்கம். ஆனா அதோட முடிஞ்சு போச்சு நம்ம ஆசையெல்லாம். ) ஆனா இவங்க அம்மா அப்பா மகனுடைய திறமையை ஊக்குவிச்சு தங்கள் நிலத்தை விற்று பயிற்சி கொடுத்துருக்காங்க.

இவர் ஜெயிச்ச பின்னாடி ஹரியானா அரசு ஒரு கோடி ரூபாய் பரிசும், மத்திய அரசு ஐ. ஏ. எஸ்சுக்கு சமமான வேலையும் தருவதாக சொல்லி இருக்குதாம். 2006 முதல் விளையாடி வரும் இவர் பல பதக்கங்களையும் விருதுகளையும் ( கேல் ரத்னா, அர்ஜுனா, பத்மபூஷன்) பெற்றிருக்கிறார்.

ஆரம்ப நாளன்று ஸ்லம்டாக் மில்லியனரில் நடித்த டேனியல் ஃபாயல் சம்பந்தமில்லாமல் விளையாட்டு வீரர்களுடன் நடந்து வந்தது ஒரே சர்ச்சையாக இருந்தது. கஷ்டப்பட்டு இவர்கள் ஆடிக் குவிக்கும் புகழை அம்மணி ஒரே ஒரு கேட் வாக்கில் நிகழ்த்தி விட்டார்.

பொதுவா டென்னிஸ் மற்றும் பில்லியர்ட்ஸ் போட்டிகள் பார்க்கப் பிடிக்கும்னாலும் ஒலிம்பிக்ஸில் மிகவும் ரசித்துப் பார்ப்பது ஜிம்னாஸ்டிக்ஸ், ( ரஷ்யவையும் அமெரிக்காவையும் விட்டா ஆளே கிடையாது) நீச்சல் போட்டிகள், மற்றும் போல்ட் வால்ட். என்னா உடம்பு அவர்களுக்கு. அது உடம்பா ரப்பர் பந்தா. ஃப்ளெக்ஸிபிள் தன்மைதான் காரணம். மற்றும் சரிவிகித உணவுகள், பயிற்சிகள், மற்றும் சிறப்பான பயிற்சிக் கூடங்கள்தான் காரணம் நம்ம நாட்டிலயும் சிறப்பா விளையாடக் கூடிய பல பேர் இருக்காங்க. அவங்கள ஹார்மோனல் டெஸ்ட் வைச்சு மூன்றாம் பாலா பிரிச்சு வெற்றிக் கோப்பையைத் தர மறுக்கிறோம். ஜெ ஜெ கல்லூரியில் படிச்ச சாந்தி ஒரு உதாரணம். மிக அருமையான விளையாட்டு வீராங்கனை அவங்க.

சத்துள்ள உணவுகளும். முறையான பயிற்சிகளும், வெளிநாடு சென்று வரும் செலவை எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிறுவனங்களும் இருந்தா நம்ம மக்களும் இன்னும் ஜொலிப்பாங்க.( அதிர்ஷ்டத்தால கோடீஸ்வரகளை உருவாக்கும் டிவி சேனல்களும், அந்த நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களும் கிரிக்கெட்டையும் ஃபுட்பாலையும் மட்டுமே விளையாட்டா கருதாம இந்த மாதிரி தனித் திறமை உள்ள விளையாட்டு வீரர்களைக் கல்லூரிகளிலேயே கண்டுபிடித்துப் பயிற்சியும் வேலையும் அளித்து ஊக்குவிக்கலாம்) மாநில அரசாங்கங்களும் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவை அதிகப்படுத்தி வேலைவாய்ப்புகள் தந்து ஊக்குவிக்கலாம்.

சின்னப் பிள்ளையில் பள்ளியில் ஓட்டப் போட்டி வைப்பாங்க. நாமதான் ஃபர்ஸ்ட்ல வரப்போறோம்னு நாக்கு தொங்கத் தொங்க ஓடி முடிச்சிருப்போம் நமக்கு முன்னால 4, 5 பேர் எல்லையைத் தொட்டிருப்பாங்க. நமக்கு ஆறுதல் பரிசு கூட கிடைக்காது. செஸ்ஸை தவிர எல்லாத்துலயும் இப்படித்தான். ( அது இண்டோர் கேம்.. உக்கார்ந்து விளையாடுறதுன்னு சொல்றீங்களா.. ஹிஹி ஆமாம். )

அதுனால நம்ம இந்தியர்களோட உடல்நிலையில் ஒரு விளையாட்டில் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றுவது என்பது கைப்பற்றுவது கஷ்டமான விஷயம்னு நல்லா தெரிஞ்சதால ககன் நீங்க நம்ம நாட்டுக்குப் பெற்றுத் தந்த வெண்கலமும் தங்கமே..

CONGRATS GAGAN NARANG.